அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல். - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்.

 




தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் மருத்துவ கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக அரசு பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ - மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத பரிதாப நிலை உள்ளது.


இதையடுத்து, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தமிழக அமைச்சர்கள் 5 பேர் குழுவாக சென்று கவர்னரை சந்தித்து மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்பதாக கவர்னர் அறிவித்தார்.

இதற்கிடையே, நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதிதர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

இந்நிலையில்,41% பேர் அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் 0.14% பேருக்கே மருத்துவ இடம் கிடைக்கிறது. தமிழக அரசின் மசோதா அரசியலமைப்புடன் முரண்படவில்லை. அரசியலமைப்புடன் ஒத்துப்போகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தூஷார் மேத்தா ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கடிதத்தையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு பின் ஆளுநர் மனம் மாறி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலால் அரசு பள்ளியில் படித்த 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப்படிப்பு இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459