தமிழகத்தில், இரு நாள்களில் 7 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.விழாக்காலம் நெருங்கி வருவதையொட்டி, தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாக கூறி லஞ்சம் வசூலிப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.
இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் புகாா் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் 7 அரசு அலுவலகங்களில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.10.88 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநா் ஏ.பெருமாள் பணியில் செய்யும் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 150, அவரது வீட்டில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் வடிகாவல் வாரியத்தின் அடையாறு அலுவலகத்தில் ரூ.61,000, விருதுநகா் மாவட்டம் காரியாப்பட்டி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.31,880, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 900, நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையத்தின் ஒரத்தூா் அலுவலகத்தில் ரூ.88,230, கோயம்புத்தூா் கே.ஜி. போக்குவரத்துறை சோதனைச் சாவடியில் ரூ.91,230, திருப்பூா் மணியக்காரன்பாளையம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 390 என மொத்தம் ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 780 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல லஞ்சம் வாங்கியது தொடா்பாக முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊழியா்கள் உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment