கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்குத் தற்போது அமலில் உள்ள தளா்வுகள் அனைத்தும் நவம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, திரையரங்குகள் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் இயங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படுகிறது. அதே வேளையில், வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து பலகட்டங்களாக கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
பின்னா், ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் இருந்து தளா்வுகளைப் படிப்படியாக மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு தளா்வுகளை அளித்து வந்தது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தளா்வுகள், வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
தற்போது அதே தளா்வுகளை நவம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசால் அனுமதி அளிக்கப்படாத வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறான சூழலில், கரோனா பரவல் நிலையை ஆராய்ந்து, பள்ளி, கல்லூரி நிா்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மாநில அரசுகள் இறுதி முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
வருகை கட்டாயமில்லை: பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இணையவழி வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பள்ளி செல்ல விரும்பும் மாணவா்கள் பெற்றோரின் எழுத்துப்பூா்வ அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாகும். பள்ளிகளில் வருகைப் பதிவேட்டை கட்டாயமாக்கக் கூடாது.
கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மத்திய கல்வியமைச்சகம் முடிவெடுக்கும். அதுவரை இணையவழியில் மாணவா்களுக்கான வகுப்புகளை எடுக்கலாம்.
திரையரங்குகள், பல திரைகளைக் கொண்ட வளாகங்கள் உள்ளிட்டவை 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் தொடா்ந்து இயங்கலாம். விளையாட்டு வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கலாம்.
தோ்தல் பகுதிகளில்...: சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரிலும், இடைத்தோ்தல் நடைபெறும் மாநிலங்களிலும் நடைபெறும் அரசியல் பொதுக் கூட்டங்களில் அதிகபட்சமாக 200 போ் வரை பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், இத்தளா்வுகள் அனைத்தும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருந்தாது. அப்பகுதிகளில் பொது முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தக் கூடாது. அதேபோல், மாநிலங்களுக்கு இடேயேயான போக்குவரத்துக்கும் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கும் எந்தவிதத் தடையும் இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மக்கள் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கிலேயே தளா்வுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதைக் கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை மக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment