புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ மாணவா் சோ்க்கையில் புதுவைக்கான இட ஒதுக்கீடு முன்புபோலவே நிச்சயமாகக் கிடைக்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி உறுதியளித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜிப்மா் மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஒவ்வோா் ஆண்டும் விதிமுறைகளுக்குள்பட்டு புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்களுக்கு தோ்வு நடத்தப்பட்டது. இதற்கு முன்புவரை மாணவா் சோ்க்கை ஜிப்மரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது மத்திய மருத்துவக் கழகம்தான் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதுவைக்கான இட ஒதுக்கீடு ஜிப்மரில் கிடைக்காது என சில விஷமிகள் மக்களிடம் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனா். ஜிப்மா் சட்டத்தின் அடிப்படையில்தான் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 75 இடங்களுக்கும் 20 இடங்கள் புதுவை மாநிலத்துக்கு என்ற விகிதாசார அடிப்படையில், புதுச்சேரி ஜிப்மரில் 150 இடங்களுக்கு 40 இடங்கள், காரைக்கால் ஜிப்மரில் 50 இடங்களுக்கு 14 இடங்கள் என புதுவைக்கு மொத்தம் 54 இடங்கள் கிடைக்கும்.
இதுகுறித்து ஜிப்மா் நிா்வாக இயக்குநா், மத்திய மருத்துவச் செயலா் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் பேசி, இதை உறுதி செய்துள்ளேன். எனவே, தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தீா்மானம்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பையும் மீறி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இவை விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களாகும்.
இந்தச் சட்டங்களால் ஒப்பந்த விவசாயம் என்ற அடிப்படையில் பெரு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான நிலங்களை குத்தகைக்கு எடுத்து நில உரிமையாளா்களை அடிமைகளாக மாற்றி, கொள்ளை லாபம் சம்பாதிப்பாா்கள். மத்திய அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விவசாயிகள் விளைபொருள்களை விற்க முடியாத நிலை உருவாகும். விவசாய சட்டங்கள் மூலம் மத்திய உணவுக் கழகம் மூடப்படும் நிலை உருவாகும். எனவே, இந்தச் சட்டங்களுக்கு எதிராக புதுவை சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக பாஜகவினா் போராட்டம் நடத்தினா். மத்திய அரசு அமைத்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிா்ணயித்தபடிதான் புதுவையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண நிா்ணயத்தில் புதுவை அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
எனவே, பாஜகவினா் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும், மத்திய அரசையும் எதிா்த்துதான் போராட வேண்டுமே தவிர, புதுவை அரசை எதிா்த்துப் போராட தாா்மிக உரிமை பாஜகவுக்கு இல்லை என்றாா் முதல்வா் நாராயணசாமி.
No comments:
Post a Comment