பாடம் கற்பிப்பதை எளிமையாக்கி கதை சொல்லியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/07/2020

பாடம் கற்பிப்பதை எளிமையாக்கி கதை சொல்லியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்


திருவண்ணாமலை மாவட்டம், ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளி,  பட்டதாரி ஆசிரியர் முனைவர் ரெ. இரமாதேவி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கு உதவியாக கதை சொல்லப்போக, ஒருகட்டத்தில் அவர் ஒரு கதைசொல்லியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளார். அதுபற்றி அவரிடம் சிறு பேட்டி.
உங்களுடைய முதல் ஆசிரியர் பணி எங்கே தொடங்கியது?
தமிழில் முதுகலையும் கல்வியியல் பட்டம் பெற்றவுடன், முதலில் சென்னை பெரம்பூர் பாரதமாதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். நான் மெல்லக் கற்கும் மாணவர்களையும் தனிப்பயிற்சி மூலம் வல்லவர்களாக உருவாக்கமுடியும் என்பதை நிரூபித்துக்காட்டினேன். திருமணத்திற்குப் பிறகு திருவண்ணாமலைக்கு நகரவேண்டிய சூழல். அங்கே குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தலை அவர்கள் விரும்பும் வண்ணம் செய்யும் முயற்சிகளை ஆரம்பித்தேன்.
எந்த காலகட்டத்தில் கதை சொல்லும் ஆர்வம் ஏற்பட்டது?
எனக்கு இயல்பாகவே கதை சொல்லுதல், பாட்டுப் பாடுவதில் விருப்பம் இருந்ததால், குழந்தை இலக்கியம் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. ஒருகட்டத்தில் குழந்தை இலக்கியம் எனக்கான களமாயிற்று. தொடர்ச்சியாக, “குழந்தை இலக்கிய வளர்ச்சியில் சிறுவர் இணைப்பிதழ்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியில் கிடைத்த அனுபவம் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும், புதுமையான கற்பித்தல்களை அறிமுகம் செய்யவும்,  கிராமப்புறக் கல்விச்சூழல்களை ஆவணப்படுத்தவும் வழிகாட்டியது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆய்வுநிலையில் அணுகுவதைவிட, வகுப்பறையில் அவர்களோடு இணைந்து கற்பிக்கவே மனம் விரும்பியது. எனவே, அலுவல் பணியில் இருந்து மாறுதல் பெற்று, ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகச்  சேர்ந்தேன்.
ஆசிரியர் என்ற நிலையில் இருந்து கதைசொல்லியாக அடையாளம் காணப்பட்ட தருணம்?
மாணவர்களுக்குக் கதைசொல்லி நடத்தும் பணி படிப்படியே என்னை ஒரு கதைசொல்லியாகவே மாற்றியது. அதைத் தொடர்ந்து, சிறந்த கதைசொல்லிக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழக ஆளுநர் வழங்கிய விருதைப் பெறும் அளவுக்கு என்னால் உயரமுடிந்தது. 
தமிழாசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பார்வையெல்லாம் இருக்காது என்ற கருத்தாக்கத்தை உடைக்கவேண்டும் என உறுதிகொண்டேன். எங்கள் பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பாடம் சார்ந்த காணொலிகளை உருவாக்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு புதிய பாடநூலின் மனப்பாடப் பாடல்களைக் காணொலிகளாக உருவாக்கி யூடியூப், ஃபேஸ்புக்,  வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பதிவேற்றினேன். அதன் மூலம் எங்கள் மாணவர்கள் மட்டுமன்றி, அனைத்துப் பள்ளி மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்.   
ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்காக என்ன செய்தீர்கள்?
பள்ளிகள் மூடப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நாட்களில் மெல்லக் கற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக, விரிவானம் என்ற துணைப் பாடப்பகுதிகளைக் காணொலியாக உருவாக்கினேன். இப்படியான பணிகளால் மாநில தமிழாசிரியர் குழுவில் எனக்கு அங்கீகாரத்தோடு பாராட்டுகளும் கிடைத்தது மனநிறைவை அளிக்கிறது. கதைசொல்லியாக உங்கள் படைப்புகளும் பங்களிப்புகளும் என்னென்ன?
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஊட்டும் புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் கதைப் புத்தகங்களை உருவாக்கும் குழுவில் இடம்பெற்றேன். மாயப்பானை, சாப்பிட வாங்க, எங்கே காட்டு, சந்தை முதலான ஆறு சிறு புத்தகங்களை உருவாக்கினேன். பிரதமரின் பள்ளிக் குழந்தைகளுக்கான போஷன் அபியான் திட்டத்திற்காக நான் எழுதிய “பழகலாம் வாங்க“ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சியில், வெளியிடப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்பிக்கும் வகையில் தமிழ், கவின் என்ற இரு கதைமாந்தர்களைக் கொண்டு  கார்ட்டூன் காணொலிகளைத் தயாரித்தேன். இன்றைய காலத்தில் குழந்தைகள் விரும்பும் கணினிவழி கற்பித்தலைத் தமிழாசிரியர்களும் சிறப்பாக மேற்கொள்ளமுடியும். என்பது நான் கண்ட அனுபவ உண்மை.
சுந்தரபுத்தன்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459