உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி திட்டம் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா பதில் அளித்தார்.
ஆன்லைன் வழிக்கல்வி
கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்தமுடியாமல் போன கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை (இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவிர) ரத்து செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, எப்போது முடிவு வெளியிடப்படும்?, இதன் மூலம் எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா நிருபர்களிடம் கூறியதாவது:-
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், என்ஜீனீயரிங் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் என மொத்தம் 14 லட்சம் பேருக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க வேண்டும்? என்ற வழிமுறைகளையும் பல்கலைக்கழகத்துக்கு அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தந்த பல்கலைக்கழகங்களின் தயார்நிலையை பொறுத்து, செமஸ்டர் தேர்வுகளுக்கு மதிப்பெண்களை வழங்குவார்கள். சில பல்கலைக்கழகங்கள் ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தெரிவித்து இருக்கின்றனர். சில பல்கலைக்கழகங்கள் 3 வாரத்துக்குள் வெளியிட முடியும் என கூறியுள்ளனர். எனவே ஒரு வாரத்தில் இருந்து 3 வாரத்துக்குள் தேர்வு முடிவு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவரிடம் ஆன்லைன் வழிக்கல்வி திட்டத்துக்கு உயர்கல்வி தயாராக இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி திட்டம் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தியபின்பு முடிவு செய்யப்படும். நாங்கள் சிறிய அளவில் ஒரு ஆய்வு நடத்தி பார்த்தோம்.
அதில் 70 சதவீதம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிகல்விக்கான தொடர்பு இருக்கிறது என்றும், 30 சதவீதம் மாணவர்களுக்கு அந்த தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் இதுதொடர்பான வழிமுறையை அறிவிப்பார்’ என்றார்.
No comments:
Post a Comment