மலை மாவட்டமான நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடி மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இணைய வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேல்லி பகுதியில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் பலரும் அடர் வனத்தின் மலை உச்சிகளிலும் மரங்கள் மற்றும் பாறைகள் மீது அமர்ந்தும் ஆபத்தான வகையில் இணைய வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
ஓவேல்லி பெரியசோலை பகுதியில் மாணவர்கள் சிலர் ஓரளவுக்கு சிக்னல் கிடைக்கும் மலை உச்சியில் கூடாரம் அமைத்துப் பயின்று வருகின்றனர். இந்தப் பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மாணவர்கள் இணைய வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தன மலைப் பகுதியில் முறையாகச் செயல்படாமல் உள்ள பி.எஸ்.என்.எல் கோபுரத்தைச் சீரமைத்து மாணவர்கள் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
இது குறித்து கூடலூர் சகாதேவன், “போதிய அடிப்படை வசதிகள் இல்லாத ஓவேல்லி சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 30,000 மக்கள் பயன்படுத்தும் இந்த சேவைக்கு சந்தனமலையில் ஒரு டவர் உள்ளது. சோலார் மூலம் இயங்கும் இந்த டவர் ஒரு நாளில் சில மணி நேரம் மட்டுமே இயங்குகிறது. எப்போதும் நெட்வொர்க் கிடைப்பதில்லை. இதனால், சிக்னல் கிடைக்கும் இடங்களைத் தேடி பல கிலோ மீட்டார்கள் அலைய வேண்டி உள்ளது.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் வனப்பகுதிகளில் ஆபத்தான நிலையில் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து இணைய வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். இரண்டு தினத்திற்கு முன்பு இங்கு திடீரென வந்த காட்டு யானையைப் பார்த்த மாணவர்கள் பயந்து ஓடி கீழே விழுந்து காயமடைந்தனர். நீலகிரியைப் பொறுத்தவரை இணைய வகுப்புகளைத் துவங்கும்முன் மாணவர்களின் வீடுகளில் மின் இணைப்பு உள்ளதா, ஸ்மார்ட் போன் வைத்துள்ளனரா, டி.வி உள்ளதா என்பதை அரசு உறுதியளிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து நீலகிரி கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் பேசினோம்.“அரசுப் பள்ளி மாணவர்கள் பயில தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் இணைய மூலம் வகுப்புகளை நடத்துகின்றனர். இந்தப் புதிய வழியில் கல்வி கற்க நீலகிரியில் பகுதிகளில் சாத்தியமில்லாத சூழலே நிலவுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment