பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/07/2020

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி


பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மனு

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து,  அதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை 6 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்தும் சாத்தியம் இல்லாததால், பள்ளி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.ஆனால், கல்லூரிஇறுதியாண்டு இறுதித்தேர்வு எழுத வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில்,  யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப் படுத்துவது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யுஜிசி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது. இதற்கு முந்தைய விசாரணையில், மனு தொடர்பாக பதில் மனுதாக்கல் யுஜிசிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இன்று யுஜிசி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இறுதி ஆண்டு தேர்வை நடத்தவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலத்தை  சரிசெய்வது என்பது மிக சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

ஆகவே இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை, என்று யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் ஒருவேளை செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என்பதையும் யுஜிசி பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது . இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரக்கூடிய நிலையில் உச்சநீதிமன்றம் இந்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்கிறதா ? தேர்வுகளை ரத்து செய்கிறதா ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களும் இதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459