தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு பரவலானதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவேடு வைத்து 20% மதிப்பெண்ணும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
மேற்கண்ட முறையில் பல பள்ளிகள் முறையாக விடைத்தாள்களை பராமரிக்காததாலும் இன்னபிற சிக்கல்களாலும் மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக சிபிஎஸ்இ-யில் மாணவர்களுக்கு கிரேட் வாரியாக மதிப்பெண் வழங்குவதை போல ஏ, பி மற்றும் சி என மூன்று கிரேட்களில் மதிப்பெண்களை வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கில் மீண்டும் பள்ளிகள் திறப்பு, கல்வியாண்டின் வேலை நாட்கள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment