கோப்பு படம்
கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தாலும், தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. என்றாலும், அவ்வாறு மீண்டவர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. நோய் பாதிப்பிலிருந்தபோதும் மருத்துவமனையிலிருந்தபோதும் நோயாளிகளைக் கண்காணிக்கும் மருத்துவர்களும் அரசாங்கமும், அவர்கள் வீடு திரும்பிய பிறகு கண்காணிப்பதில்லை. இதனால் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நீடிக்கும் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது எனத் தெரியாமல் பலர் குழம்பி வருகின்றனர்.
இது தொடர்பான சந்தேகங்களை தொற்றுநோயியல் மருத்துவர் சித்ராவிடம் கேட்டோம்.
“கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு உடல்வலி, சோர்வு ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன. கொரோனா தொற்றின்போது வாசம், சுவையை அறியமுடியாத நிலை ஏற்படும். அது சரியாக சிறிது நாள்கள் ஆகும். சிலருக்கு 10 நாள்களுக்கு மேல் தேவைப்படுகிறது.
பசியுணர்வும் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குக் குறைந்தே காணப்படுகிறது. தூக்கமின்மை பிரச்னையும் பரவலாக உள்ளது. தொற்று ஏற்பட்டபோது இருந்த பயம், பதற்றம் காரணமாக தூக்கமின்மை நீடிக்கிறது. சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் ஒரு மாதம்வரைகூட நீடிக்கலாம்” என்றவரிடம், கொரோனா தொற்று நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்லுமா என்று கேட்டோம்.
”கொரோனா தொற்றால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் பற்றி போகப் போகத்தான் தெரியவரும். சர்க்கரை நோயாளிகளுக்குக் கொரோனா தொற்றுக்குப் பிறகு, ரத்தச் சர்க்கரை அளவில் கட்டுப்பாடு போய்விடுகிறது. அவர்கள் சர்க்கரைநோய்க்காக முன்னர் எடுத்துவந்த மருந்துகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் வர மறுக்கிறது. மாத்திரைக்கு கட்டுக்குள் வராததால் சிலர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றவர், கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
”கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் வைட்டமின் சி, ஸிங்க், மல்டி விட்டமின் போன்றவற்றை மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்வதன் மூலம் அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டால்கூட உடல்வலி, சோர்வு ஏற்படலாம். அதனால் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த உணவு முறை அவசியம். ஆவி பிடிப்பதையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அவர்களுக்கு இருக்கும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளைத் தவறாது எடுக்க வேண்டும். உடல்வலி அதிகமாக இருந்தால் வலிநிவாரண மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் தூக்கமின்மைக்கும் மருத்துவரிடம் மருந்து கேட்கலாம்.
ஒருமுறை கொரோனா தொற்று வந்துவிட்டால் மீண்டும் ஏற்படாது என்று எண்ணி மெத்தனமாக இருக்கக்கூடாது. அதேவேளை, தொற்று குறித்த அதீத பயமும் இருக்கக்கூடாது. இதற்கு மருத்துவருடனான ஆலோசனை அவசியம். தொற்றிலிருந்து மீண்டவர்கள், மருத்துவரிடம் மனம்விட்டுப் பேசி, தங்கள் சந்தேகங்களை, அச்சங்களைப் போக்கிக்கொள்ளலாம்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைச் சுத்தப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தொற்றிலிருந்து மீண்டவர்களும் பின்பற்ற வேண்டியவை. தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா ஆகியற்றை மேற்கொள்ளலாம். மூச்சுப்பயிற்சி நுரையீரலின் திறனை அதிகரிக்கக் கைகொடுக்கும். தியானத்தின் மூலம் மனஅமைதி கிடைக்கும்.
எந்த ஒரு தொற்று ஏற்பட்டாலும், அதற்குப் பின்னர் உடல் இருக்கத்தான் செய்யும். கொரோனா வைரஸை பொறுத்தவரை மறுதொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே என்றாலும், பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என்கிறார் மருத்துவர் சித்ரா.
No comments:
Post a Comment