கரோனாவிலிருந்து சிறுநீரக நோயாளிகள் தப்பிப்பது எப்படி ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/07/2020

கரோனாவிலிருந்து சிறுநீரக நோயாளிகள் தப்பிப்பது எப்படி ?



கொரோனா , சிறுநீரக பாதிப்பு உடையோர்களுக்கு  விரைவாக தாக்குகிறது.
சிறுநீரக பாதிப்பு இரண்டு விதம்

கரோனா வைரஸ் தாக்கும்போது ‘செப்சிஸ்’ எனும் நிலைமை உண்டாகும். கிருமித் தொற்றுகள் வழியாக நம் ரத்த ஓட்டத்தில் நச்சுகள் கலக்கும்.வீரியமிக்க மருந்துகளுக்கும் சவால் விடும் ஆபத்தான நிலைமையும்கூட. இந்த நச்சு ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும் போது அங்குள்ள சிறுநீரைப் பிரித்தெடுக்கும் அமைப்பைக் கெடுக்கிறது. இதனால் சிறுநீரகம் செயலிழக்கிறது.
அடுத்ததாக, கரோனா வைரஸுக்கே உரித்தான ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனும் தீவிர அழற்சி நிலை, சிறுநீரகச் செயல்பாட்டைச் சிதைக்கிறது. ஒருவருக்கு கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படும் போது இந்த இரண்டு நிலைமைகள் (Acute kidney injury) முதல் முறையாகவும் ஏற்படலாம். அல்லது ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நாட்பட்ட சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் (Chronic kidney disease) ஏற்படலாம். அப்போது சிறுநீரகத்தின் செயல்பாட்டை இவை மோசமாக்கி விடுவதால்தான் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்தியாவில் 9 – 17 சதவீதம் பேருக்குச் உள்ளது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர். முதலில் சிறுநீரக நோய்க்குரிய மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கட்டுப்படுத்துங்கள். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதைத் தவிர்க்காதீர்கள்.
நீங்கள் சாப்பிடும் வழக்கமான மாத்திரை, மருந்துகள் குறைந்தது ஒரு மாத காலத்துக்கு போதுமானதாக இருப்பில் இருக்கட்டும்.
அரசு மருத்துவமனைகளில் இப்போது ஒரு மாத காலத்துக்கு இலவசமாக மாத்திரைகள் தருகிறார்கள். அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருந்து தட்டுப்பாடு காரணமாக நீங்கள் சாப்பிடும் அதே நிறுவனத்தின் மருந்துகள் கிடைக்காவிட்டால், பொதுப் பெயரில் கிடைக்கும் மருந்துகளை (Generic medicines)அவசரத்துக்குச் சாப்பிடலாம்; தவறில்லை. மாத்திரையைச் சாப்பிடாமல் இருப்பதுதான் தவறு.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர்
வீட்டில் வெப்பமானி மூலம் உடலின் வெப்பநிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சல் இருப்பதாகத் தெரிந்தால், மருத்துவரிடம் அலைபேசியில் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். குளிர் காய்ச்சல் சிறுநீரக நோயாளிகளுக்கு வழக்கமாக ஏற்படும் ஓர் அறிகுறி. இது தொற்று பாதிப்பிலும் வரலாம்.
இதுபோல் மூச்சுத் திணறல் என்பதும் இவர்களுக்கு வழக்கமான அறிகுறிதான். கரோனா பாதிக்கும் போதும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இயல்பாக நம் ரத்தத்தில் 95 முதல் 100 சதவீதம்வரை ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். அப்போதுதான் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் முறையாகச் செயல்படும். பொதுவாகஇந்த அளவு 95 சதவீதத்துக்கும் கீழே குறைந்து போனால் அதற்குப் பெயர் ‘ஹைப்பாக்சியா.’ அப்போது மூச்சுத் திணறல் ஏற்படுவது வழக்கம்.
மாறாக, கரோனா நோயாளிகளில் 10-ல்2 பேருக்கு ரத்தத்தில் 70-ல் இருந்து 80 சதவீதம்தான் ஆக்ஸிஜன் அளவு இருக்கிறது. ஆனாலும், மூச்சுத் திணறல் இருப்பதில்லை. தங்கள் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ள விவரம் தெரியாமல் அவர்கள் எப்போதும் போல் இருப்பார்கள். அடுத்த சில நாட்களில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு 80 சதவீதத்துக்கும் கீழே குறையும் போது திடீரென்று மூச்சுத் திணறல் உண்டாகிறது.
அப்போது உடலில் சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன.அவற்றை மீட்டெடுக்க அவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி விடுகிறது. இந்த நிலைமையை ‘சைலன்ட் ஹைப்பாக்சியா’ அல்லது ‘ஹேப்பி ஹைப்பாக்சியா’ என்கிறோம்.
இந்த நிலைமையைத் தொடக்கத்திலேயே தெரிந்து கொள்ள ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மூலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைத் தினமும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்துக்குக் குறையும் போது மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். கரோனாவைப் பொறுத்த அளவில் எவ்வளவு விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சைபெறுகிறோமோ அந்த அளவுக்கு அதன் கடுமையான பாதிப்புகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
வாழ்க்கை முறை
புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள். இந்த இரண்டையும் இப்போது நிறுத்தினால்கூட பலன் கிடைக்கும். இவற்றை நீடித்தால் ஒருவேளைகரோனா வைரஸ் தாக்கினால், லேசாக வந்துபோகக் கூடிய நோய்கூட கடுமையாகி விடலாம். அவசியம் கருதி வெளியில் சென்றால் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள்
. கட்டாயம் சமூக இடைவெளி பேணுங்கள். கூட்டம் கூடும் இடங்களில் அதிக நேரம் செலவிடாதீர்கள்.
வீட்டுக்கு வந்ததும் கைகளைச் சோப்புப் போட்டு 20 விநாடிகளுக்குக் கழுவுங்கள். வீட்டில் இருக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியில் தினமும் 6 முறை கைகழுவுங்கள். கை கழுவ சானிடைசரைவிட சோப்புதான் சிறந்தது.
அசைவம் வேண்டாம்
துரித உணவுகளும் அசைவ உணவுகளும் வேண்டாம். உப்பு குறைந்த வீட்டு உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பொதுவாக, கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், சிறுநீரகநோயாளிகளுக்குப் புரதம் அளவோடுதான் இருக்கவேண்டும். ஆகவே, பருப்பு, பயறு உள்ளிட்ட புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். முட்டைக்கோஸ், ஆப்பிள், அன்னாசி,கொய்யா, பப்பாளி ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் இருந்தால் ஆப்பிளும் கொய்யாவும் மட்டும் போதும். வெங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், கருஞ்சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றை தினசரி உணவுத் தயாரிப்புகளில் கட்டாயம் சேர்க்க வேண்டும். உதாரணமாக, மிளகு ரசம் சிறந்த நோய் எதிர்ப்பூட்டி.
தண்ணீர் முக்கியம்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தொலைக்காட்சி செய்திகளைத் தொடர்ந்து பார்க்காதீர்கள். கரோனா தொடர்பாக அவை கிளப்பும் பீதிகளால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறையவே வாய்ப்பிருக்கிறது. பொழுதைக் கழிக்க செய்தித்தாள் வாசிப்பது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது போன்ற ஆரோக்கிய வழிகளில் செலவிடுங்கள்.
வீட்டில் முடங்கிக் கிடப்பதால் மனச்சோர்வுக்கு ஆளாகாதீர்கள். எப்போதும் உற்சாகமாக இருங்கள்
. நீங்கள் சமூக இடைவெளியில்தான் இருக்கிறீர்களே தவிர, சமூக ‘விலகலில்’ இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் உறவாடுங்கள். உறவுகளுடன், நண்பர்களுடன் அலைபேசியில் பேசுங்கள். விளையாட்டுகளிலும் ஈடுபடுங்கள். தொடர்ந்து வீட்டில் இருப்பதால் உடல் இயக்கம் குறையும். அதனால் உடல் எடை கூடிவிடக் கூடாது. சிறிய உடற்பயிற்சிகள், பிரணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
நியூமோகாக்கல் தடுப்பூசி
கரோனா நோயாளிகளுக்கு முதலில் வைரல் நிமோனியா ஏற்படுவதன் மூலம் மூச்சுத் திணறல்ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து பாக்டீரியா துணைத் தொற்று மூலமும் நிமோனியா ஏற்படுகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்க நியூமோகாக்கல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். மூட்டு வலி, மூலிகை மாத்திரைகளை தவிருங்கள். டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள் கபசுர குடிநீர் குடிக்கலாமா என்பதைச் சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். ஜிங்க் கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை, வைட்டமின்-சி மாத்திரை மற்றும் வைட்டமின்-டி மாத்திரை சாப்பிடலாம்.
இவை எல்லாமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமே தவிர பாதிப்பை குணமாக்காது.
வீட்டில் உள்ளவர்கள்
சிறுநீரக நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், கழிப்பறை சுத்தம் அவசியம். சிறுநீரக நோயாளிக்கு இருமல், தும்மல், காய்ச்சல், உடல் வலி,தொண்டை வலி, வாசனை உணர்வு குறைவது,ருசி தெரியாமல் போவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைத் தவிர்ப்பது நல்லது.
இந்த வழிகளில் சிறுநீரக நோயாளிகளும் கரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. தேவை, விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கைகளும் மட்டுமே!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459