ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொருந்துமா - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/07/2020

ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொருந்துமா

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராமகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். எனது பணி நிலைக்கு ஓய்வு வயது 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 29ம் தேதியுடன் நான் ஓய்வு பெற வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் கடந்த மே 7ல் தமிழக தலைமைச் செயலர் ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி, 58 வயதில் ஓய்வுபெற வேண்டிய அரசு ஊழியர்களின் பணியை 59 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை எனக்கும் பொருந்த வேண்டும். அரசாணைப்படி எனக்கும் பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், விஸ்வநாதன் என்பவரும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.  வக்கீல் ஆர்.உதயகுமார் ஆஜராகி, ‘‘பணி நீட்டிப்பிற்கான அரசாணை டாஸ்மாக்கிற்கு பொருந்தாது என அதிகாரிகள் கூறுகின்றனர்’’ என்றார்.  இதையடுத்து மனுவிற்கு தலைமை செயலர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459