அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீட்டை தர மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிசியினருக்கு மருத்துவப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
*ஓபிசி. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நீண்ட காலமாக அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது.
*இதை எதிர்த்து 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அபயநாத் என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
*ஆனால், மருத்துவத்தில் ஓபிசி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தமிழகத்தில் இருக்கும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் 1996ல் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
*இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
*இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படி வழங்கினாலும் உச்ச நீதிமன்றம்தான் அதற்கான தீர்ப்பை வழங்க முடியும். ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
*இதற்கிடையே, உச்ச நீதிமன்றதில் டி.கே.பாபு என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் வாதிட்டார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
*இதையும் மீறி மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளது. இந்த வழக்கில் முந்தைய விசாரணையில், இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
இந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி கொண்ட அமர்வு மேற்கண்ட வழக்கில் தீர்ப்பை வாசித்தனர். அப்போது இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற மருத்துவக்கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என்று கூறினர். மேலும் நீதிபதிகள் வாசித்த தீர்ப்பு விவரம் பின்வருமாறு,
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
30 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும்.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment