கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
கொரோனா அச்சம் இருப்பதால் தேர்வை நடத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்தன. ஆனால் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி அனைத்து மாணவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் 40 பேர் வரை அமரக்கூடிய தேர்வு அறையில் வெறும் 18 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7,61,506 மாணவர்களில் 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 80 மாணவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,
தொற்று உறுதி செய்யப்பட்ட 32 மாணவர்களுடன் நேரடி தொடர்பு உடையவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தேவைப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய அறைகளில், தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட உள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் 3,911 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாததால் மேலும் 863 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பை மீறி பொதுத்தேர்வு நடத்தி, இப்போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment