சென்னை,
குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை குறித்த காலக்கட்டத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், அந்த வழக்கில் கைதானவர்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியில் வரலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப் 2-ஏ, குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனர். இந்த மோசடியில் முக்கிய நபராகவும், பல லட்சம் ரூபாய் வசூலித்து புரோக்கராகவும் இருந்தவர் ஜெயக்குமார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
ஏற்கனவே ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்தநிலையில், தன்னை கைது செய்து 90 நாட்கள் கடந்தும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மோசடி வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அதனால், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுபோல இந்த வழக்கில் கைதான மேலும் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதே நேரம் குற்றப்பத்திரிகை உரிய காலக்கட்டத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால், இதுபோல ஜாமீன் பெற முடியுமா? என்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.சுவாமிநாதன், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். எனவே இந்த தீர்ப்பில் எது சரியானது என்பதை முடிவு செய்ய ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நியமித்துள்ளார்.
இந்த சிறப்பு அமர்வு விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்தநிலையில், ஜெயக்குமார் ஜாமீன் கேட்ட மனு ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘சிறப்பு அமர்வு தீர்ப்பு விரைவில் வர உள்ளதால், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைக்கிறேன்‘ என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment