கொரோனாவைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் : வாழைப்பழ வியாபாரியான கொடூரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/06/2020

கொரோனாவைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் : வாழைப்பழ வியாபாரியான கொடூரம்


15 வருடங்களுக்கு மேலாக தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா என்பவரை இந்த கொரோனா வாழைப்பழ வியாபாரியாக மாற்றியுள்ளது. கொரோனாவைக் காரணம் காட்டி வெங்கட சுப்பையாவை பணியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்கியதால், வேறு வழியின்றி வாழைப்பழம் வியாபாரத்தில் இறங்கிவிட்டார் ஆசிரியர் வெங்கட சுப்பையா.
நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா, பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் பணியாற்றும் 5 பேரையும் காணொலியில் அழைத்த பள்ளி நிர்வாகம், வேலை திருப்திகரமாக இல்லை எனக்கூறி வேலையை விட்டு நீக்கியுள்ளது.
பாடங்களை எடுப்பதைக் காட்டிலும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதே பெரும் பணியாக தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதில் தவறியதால் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் வெங்கட சுப்பையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறு வழி இல்லாமல் வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார் ஆசிரியர்.
ஆசிரியரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக 86300 ரூபாயை அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர்.
”எனக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதனை உங்களது எதிர்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு முன்னாள் மாணவர்களிடம் கூறினேன். ஆனால் விடாப்பிடியாக அவர்கள் பணம் கொடுத்துவிட்டனர். எங்களைப் போன்றவர்களுக்கு அரசு உதவ வேண்டும். குடும்பச் சூழல் காரணமாகவே தற்போது வாழைப்பழம் விற்கிறேன்” எனத் தெரிவித்துள்ள ஆசிரியர் வெங்கடசுப்பையா, சம்பளம் குறைவு என்றாலும் மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்வேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459