பொதுத் தேர்வு ரத்து : மும்பை தமிழ் மாணவர்களுக்கு பொருந்துமா ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/06/2020

பொதுத் தேர்வு ரத்து : மும்பை தமிழ் மாணவர்களுக்கு பொருந்துமா ?


மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்வழிப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் தமிழ்நாட்டுப் பாடத்திட்டங்களே பின்பற்றப்படுகின்றன. சில பள்ளிகள் வெறுமனே ஆரம்பக் கல்வியுடன் நிறுத்திவிடாமல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் கூட தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின்படியே நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை 10-ம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டபோதும், நம் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தவித்தார்கள். தொடர்ந்து தேர்வுக்கும் தயாரானார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
ஆனால், இந்த அறிவிப்பு பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின்படி படிக்கிற மாணவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்த விவரம் ஏதும் அரசாணையில் இல்லை.
இதுகுறித்து ‘மும்பை விழித்தெழு இயக்கத்தின்’ ஸ்ரீதர் தமிழன் கூறியதாவது:
”தமிழ்நாட்டிலேயே தமிழ்வழிக்கல்வி குறைந்துவரும் நிலையில், மும்பை தாராவி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இப்போதும் சில பள்ளிகள் தமிழ்வழியில் பாடம் கற்பித்துவருகின்றன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளையும் முறைப்படி நடத்திவருகின்றன. ஆனால், இது வேற்று மாநிலம் என்பதால் இங்கிருந்து தேர்வெழுதும் மாணவர்களைத் தனித் தேர்வர்களாகவே தமிழ்நாடு அரசு கருதி, தேர்வுகளை நடத்துகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழ்நாட்டு மாணவர்களைவிட பல மடங்கு பாதிக்கப்பட்டவர்கள் மும்பைத் தமிழ் மாணவர்கள். காரணம், தமிழ்வழியில் படிப்பவர்களில் பலர் ஏழைகள்.
இப்போது அவர்களோடு தேர்வு எழுத வேண்டிய தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிவிப்பு தங்களுக்கும் பொருந்தும் என்று மாணவர்கள் மகிழ்ந்தார்கள்.
ஆனால், தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தப்படும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்ததால், இந்த மாணவர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே கரோனாவால் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிற நகரம் மும்பை. அது எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கவே முடியாத சூழல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனித்தேர்வு நடத்தினாலும் கூட, மும்பையில் தேர்வு நடத்த முடியுமா என்பது சந்தேகமே. பள்ளி இறுதி வகுப்பான 10-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களின் வாழ்க்கையே மாறிப்போய்விடுவதை மும்பையில் களப்பணி செய்கிறவர்கள் என்கிற முறையில் நாங்கள் அறிவோம்.
வெறுமனே உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவே அவர்கள் மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது.
எனவே, 10-ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அரசு ஆணையிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் எழுதியுள்ளோம்”.
இவ்வாறு ஸ்ரீதர் தமிழன் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459