நீதிபதிகளுக்கும கொரோனா தொற்று : வழக்கு விசாரணையில் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/06/2020

நீதிபதிகளுக்கும கொரோனா தொற்று : வழக்கு விசாரணையில் மாற்றம்


சென்னை; சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் சிலருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக வந்த தகவலை தொடர்ந்து, வழக்கு விசாரணையில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவாறு, அவசர வழக்குகளை மட்டும், காணொலி காட்சி வழியாக விசாரிப்பது என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏப்ரல் மாதத்தில், அவசர வழக்குகளை மட்டுமே, காணொலி காட்சி வழியாக விசாரிக்க, ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.வழக்கமாக விடப்படும், மே மாத கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
அந்த மாதத்தில், அவசர வழக்குகளை, வீட்டில் இருந்தபடி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. மே மாதத்தில், முதல், 15 நாட்களுக்கு, 14 நீதிபதிகள்; அடுத்த, 15 நாட்களுக்கு, 14 நீதிபதிகள் என, 28 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.ஜூன், 1 முதல், அனைத்து நீதிபதிகளும், உயர் நீதிமன்றம் வந்து வழக்குகளை விசாரிப்பது எனவும், வழக்கறிஞர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் நீதிபதிகள் அனைவரும், உயர் நீதிமன்றம் வந்து, தங்கள் சேம்பர்களில் இருந்து, காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தினர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், ஒன்பது மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களிலும், வழக்கம் போல் விசாரணை நடந்தது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, விசாரணை நடந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடிய வில்லை. பதிவுத்துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலருக்கு, வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அதோடு நின்று விடவில்லை.உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு நடந்த பரிசோதனையில், மூவருக்கு வைரஸ் தொற்று பாதித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி விவாதித்தது.அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பு:மற்ற பகுதிகளை விட, சென்னையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாலும், உகந்த சூழ்நிலை இல்லாததாலும், உயர் நீதிமன்றம் இயங்குவதற்கு, வேறு அணுகுமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் பிரச்னை உள்ளது. இது, நீதிபதிகளின் பணியிலும், பாதுகாப்பு ஊழியர்களின் பணியிலும், தாக்கத்தை ஏற்படுத்தும்.உயர் நீதிமன்றத்தில், நேரடியாக வழக்கு விசாரணை நடத்தும்படி, பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் கோரினாலும், தற்போதைய சூழ்நிலையில், காணொலி காட்சி வழியாக மட்டுமே விசாரணை நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அவசர வழக்குகளை மட்டும், காணொலி காட்சி வழியாக விசாரிப்பது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டும், நான்கு நீதிபதிகள் தனித்தனியேயும் செயல்படுவது என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றும், மூன்று நீதிபதிகள் தனித்தனியேயும் செயல்படுவது என, முடிவெடுக்கப்பட்டுஉள்ளது.இந்த நடைமுறை, புதிய முடிவு எடுக்கும் வரை அல்லது இம்மாதம் முழுதும் அமலில் இருக்கும். இவ்வாறு, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாரத்துக்குஎட்டு நீதிபதிகள்!
நாளை முதல், 14ம் தேதி வரை, வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்
. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, நீதிபதிகள் சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக ஒன்பதுமாவட்ட நீதிமன்றம்!
ஏற்கனவே, ஒன்பது மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்கள் இயங்க, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்போது, அரியலுார், பெரம்பலுார், ஈரோடு, புதுக்கோட்டை, கடலுார், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்கள் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்கள் மட்டுமே இயங்க நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல், இந்த நீதிமன்றங்கள் இயங்கும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459