சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
இதனால் உலகம் முழுவதுமே பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிட்- 19 காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அமலுக்கு வரும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்று பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் கூறும்போது, ”கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது.
தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை, குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும்போது தொற்று நிச்சயம் பரவும்.
தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை, குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும்போது தொற்று நிச்சயம் பரவும்.
ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்து கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1-ம் தேதி முதல் புதிய தளர்வுகளை அறிமுகப்படுத்தியது.
பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றால் 22,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,011 பேர் பலியாகி உள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) 579 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment