பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடையச்செய்யும் அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், வருகைப் பதிவேடு அடிப்படையிலும் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
. இதேபோல 11ஆம் வகுப்பில் கடைசி பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்கள் ஏற்கனவே பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது அனைத்து தனியார் பள்ளிகளும் மாணவர்களின் விடைத் தாள்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களை தேர்வு எழுதச் சொல்லி விடைத்தாள்களை பெற்று வருவதாக புகார்கள் வரத் துவங்கியுள்ளன
. தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த கருத்தை பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. எனவே முதலமைச்சர் அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேர்வுத்துறை வகுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment