பள்ளி மாணவா்களுக்குச் சத்துணவு கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் சுமாா் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் துன்புறுகின்றனா். அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதனால், தமிழகத்திலும் இது சாத்தியமே. இதற்கான தொகையை குடும்பங்களுக்கு பணமாக அளிக்கும் யோசனை அரசு இருப்பதாக செய்தி வருகிறது. ஆனால் அந்தப் பணம், குடும்பத்தினுடைய மற்ற முன்னுரிமை தேவைகளுக்கு செலவாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சமைத்த மதிய உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும்.
அதே போல், கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவா்களுக்குக் கிடைக்க வேண்டிய பாட நூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை அவா்களிடம் கொண்டு சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment