போலி இ-பாஸ்களை கண்டறிய, திருப்பூர் மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில், 'மொபைல் ஆப்' மூலம், ஸ்கேன் செய்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், குறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்தப் பட்டுள்ளது.அவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன.இருப்பினும், பலர் முறையான தகவல் தெரிவிக்காமல், உடுமலை பகுதிக்குள் நுழைவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக, கேரளா எல்லையான சின்னாறு, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதிகளில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார், வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அதே போல், திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில், அமைக்கப் பட்டுள்ள, அந்தியூர் சோதனை சாவடி, ஆனைமலை ரோட்டிலுள்ள தேவனுார்புதுார், பொள்ளாச்சி தாராபுரம் ரோட்டிலுள்ள புதுப்பாளையம் திண்டுக்கல் மாவட்ட எல்லையான குதிரையாறு, மடத்துக்குளம் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விதிமீறி வருபவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.மேலும், போலி இ-பாஸ்களை கண்டறிய, பிரத்தேயக 'மொபைல் ஆப்' மூலம், ஸ்கேன் செய்து உறுதி செய்த பின்னரே வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறது.பிற பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்கள் குறித்த தகவலை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment