62 ஆண்டுகளில் முதல் முறையாக செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் : ஐஐடி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/06/2020

62 ஆண்டுகளில் முதல் முறையாக செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் : ஐஐடி அறிவிப்பு





வரும் செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் உடல்நலப் பாதுகாப்பில் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று உயர்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அறிவித்ததைத் தொடர்ந்து மற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
62 ஆண்டுகால வரலாற்றில் ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஒரு செமஸ்டர் முழுவதும் மாணவர்கள் கல்லூரிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
வரும் ஜூலை மாதம் செமஸ்டர் வகுப்புகள் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடக்கும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து இயக்குநர் சுபாஷிஸ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“செனட் உறுப்பினர்களுடன் நீண்ட கலந்தாய்வுக்குப்பின், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அடுத்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்.
மாணவர்கள், பேராசிரியர்கள் உடல்நலனில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளப்போவதி்ல்லை. மாணவர்களுக்கான அடுத்த கல்வி ஆண்டு எந்தவிதமான தாமதமும் இன்றி இதன் மூலம் உறுதியாகத் தொடங்கும். அனைத்து வகுப்புகளும் முழுமையாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும். அதற்கான அனைத்து விவரங்களும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்
.
ஏராளமான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் இருந்து வருகிறார்கள், அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி கிடைக்கத் தேவையான உதவிகள், நன்கொடைகள் அளித்து உதவ வேண்டும்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு தனது வழிகாட்டல்களை மறு ஆய்வு செய்து, மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, கரோனா சூழலையும் மனதில் வைத்து கல்வியாண்டை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூஜிசி அதிகாரிகள் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான ஜூலை மாதம் நடத்தப்பட உள்ள தேர்வுகள் ரத்து செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்
. மாணவர்களுக்கு மதிப்பெண்களை எவ்வாறு அளிப்பது குறித்த ஆலோசனை நடக்கிறது” எனத் தெரிவித்தனர்.
மனித வளத்துறை அமைச்சகம் முன்பு கூறியபடி, கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குவது என்றும், புதிய மாணவர்களுக்கான கல்வியாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது இன்னும் தாமதமாகி அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த வாரத்துக்குள் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459