பிளஸ் 1 மாணவர் சேர்க்கை : பெற்றோருக்கு பறக்கும் எஸ்எம்எஸ் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை : பெற்றோருக்கு பறக்கும் எஸ்எம்எஸ்


* பெற்றோருக்கு பறக்கும் எஸ்எம்எஸ்
சேலம்:  தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் ஆல்-பாஸ் அறிவிப்பு வெளியான நிலையில், பிளஸ் 1 சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு மார்ச் 27ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நோய் தொற்று குறையாததால், அடுத்தடுத்து 2 முறை தேர்வு தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து, நோய் தாக்கம் அதிகரித்ததால் நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பத்தாம் வகுப்பிற்கான அனைத்து தேர்வுகளும், பிளஸ் 1 வகுப்பிற்கு விடுபட்ட ஒரு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு, பெற்றோர்களும் நிம்மதியடைந்துள்ளனர். அரசு தரப்பில் ஆல்-பாஸ் அறிவிப்பு ெவளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே, பெரும்பாலான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடவடிக்ைகயை தொடங்கிவிட்டன
. முதற்கட்டமாக, ஏற்கனவே அவர்களது பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து அதே பள்ளியில் தக்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பத்தாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் எஸ்எம்எஸ் மூலமாக, பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை, அதிலுள்ள பாடப்பிரிவுகள், நடப்பு ஆண்டிற்கான கல்விக் கட்டணம் மற்றும் சீருடை, வாகனம், விடுதி என இதர கட்டணங்கள் குறித்து தெரிவித்து வருகின்றன. எஸ்எம்எஸ் கிடைக்கப்பெற்ற பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கான பிளஸ் 1 சேர்க்கையை உறுதி செய்ய, செல்போன் மூலமாகவே பதிவும் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்து வருகின்றன. இதிலும் ஒரு சில பள்ளிகளில் நேற்று பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகமே தொடங்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: வழக்கமாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதும், மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தங்களது பள்ளிக்கு இழுக்க கடும் போட்டி  இருக்கும். ஆனால் நடப்பாண்டு, மதிப்பெண் பெரிய அளவில் பேசப்படாது என்பதால், இப்போதே சேர்க்கை நடவடிக்கை தொடங்கிவிட்டது. மருத்துவ சேர்க்கைக்கு நீட் கட்டாயம் என்பதால், அதில் சேர விரும்பும்  மாணவர்கள்,சிறந்த உயிரியல் பாட ஆசிரியர் உள்ள பள்ளியில் சேர விரும்புவர். அதேபோல் ஐஐடிக்கு செல்ல, சிறப்பாக செயல்படும் கணித ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கும். கொரோனா இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,வகுப்புகள் தொடங்க பல மாதங்கள் கூட ஆகலாம்.
இதனால், மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியாக அலசி ஆராய்ந்து தேர்வு செய்ய அவகாசம் உள்ளது. இதன் காரணமாகவே மாணவர்கள் இப்போதே தங்களது பள்ளியில் சேர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது. இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கட்டண சலுகைக்கு வாய்ப்புகள் இல்லை
வழக்கமாக பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்,தங்களது பள்ளியிலேயே தொடரவும், பிற பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் புதிதாக வந்து சேரவும் தனியார் பள்ளிகள் தரப்பில் இலவச சேர்க்கையும், 100 சதவீதம் வரை கட்டண சலுகையும் வழங்கப்படும். ஆனால், நடப்பாண்டு ஆல்-பாஸ் என்பதால் மதிப்பெண் பெரிய அளவில் எடுபடாது. இதனால்,இலவச சேர்க்கை மற்றும் கட்டண சலுகைக்கான வாய்ப்புகள் இருக்காது என கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459