தென்காசி மாவட்டம், மேலகரம், இலஞ்சியில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஏழை, எளியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 4) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா கால ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழக அரசின் வருமானம் 3 லட்சம் கோடி. மதுபானக் கடைகள் மூலம் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வருகிறது. தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கும் 7,500 ரூபாய் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். இது தாங்க முடியாத செலவினம் அல்ல.
பிரதமர் வானொலியில் பேசியிருக்கிறாரே தவிர எந்த ஆக்கபூர்வமான உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்யவில்லை. 15 கோடி ஏழை, நடுத்தர, சாதாரண மக்களுக்கு ரூ.7,500, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்தத் தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். அவர்களது சம்பளத்தையும் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment