ஸ்மார்ட்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோன பரவலை அடுத்து பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் இயங்காத சூழ்நிலையே பல மாநிலங்களில் நிலவுகிறது. இதனால் இந்த ஆண்டு நடத்த வேண்டிய இறுதி ஆண்டுத் தேர்வைக்கூட நடத்த முடியாமல் கல்வித்துறை தவித்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஆகவே பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு தரப்பில் அதற்குகூட சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் இல்லாததால் வருத்தமடைந்த 16 வயது மாணவர் ஒருவர் நேற்று அசாமின் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிராங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே அந்த மாணவன் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, மிக ஏழ்மையான குடும்ப பின்புலத்தைக் கொண்ட இந்த மாணவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், அவனது பள்ளி நடத்திய ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் அவனால் பங்கேற்க முடியாததால் பதற்றமடைந்தாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அசாமிலும் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஸ்மார்ட் போன்கள் மூலம் வேறுபாடு இல்லாமல் தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் நடத்தி வருகின்றன. இதில் கலந்து கொள்ள ஸ்மார்ட் போன் கட்டாயம் தேவை. ஆனால் தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவனிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனக் கூறப்படுகிறது
.
.
இது குறித்து சிராங்கின் காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் சிங். “சிறுவனின் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவரது தாயார் வேலை தேடி பெங்களூருக்குச் சென்றிருந்தார். அவருடைய தந்தைக்கு எந்த வேலையும் இல்லை. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க சிறுவனுக்கு ஒரு ஸ்மார்ட் போன் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அவனது தந்தையால் அதனை வாங்கித் தர முடியவில்லை”என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்டை வீட்டுக்கார்க மற்றும் இறந்த மாணவனுக்கு நெருக்கமான நண்பர்களிடம் இருந்து சில விவரங்களை கேட்டு பெற்றுள்ளோம். அதன்படி மாணவன் தன் நிலைமையைக் கண்டு சோர்ந்துபோய் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள எடுக்க முடிவு செய்துள்ளான்” என்று கூறினார். மேலும் அதிகாரிகள் உரிய பிரேதப் பரிசோதனைக்காக காத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
.
.
இதற்கு முன்னதாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஸ்மார்ட்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று இந்த மாத தொடக்கத்தில் தீ வைத்துக் கொண்டார் என்று குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எந்த விதத்திலும் சரியான முடிவு அல்ல; ஆகவே வாழ்க்கையில் இதைப்போன்ற சங்கடங்களை எதிர்த்து வாழப் பழக வேண்டும். மேலும் தற்கொலை எண்ணங்கள் மனதில் உருவானால் ‘சிநேகா’ போன்ற தன்னார்வலர் நடத்தும் அமைப்பை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும்.
மேலும் இந்த எண்ணில் ஆலோசனை பெறலாம்: 044 2464 0050
No comments:
Post a Comment