தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, ரூ.170 கோடிக்கு சரக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், சேலம் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் மது பெறுவதற்கான டோக்கன் வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுப் பிரியர்களைப் பள்ளி வளாகத்தில் வரிசையில் நிற்கவைத்து டோக்கன் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதி மோகன்ராஜ், “காமலாபுரம் ஊராட்சியில் கூலித் தொழிலாளிகள் அதிகம். இங்கு 3 டாஸ்மாக் கடைகள் அருகருகே இருக்கின்றன. இந்த டாஸ்மாக் கடைகள், கடந்த 40 நாள்களாக கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன. அதனால் இங்கிருக்கும் பெண்கள் நிம்மதியாக இருந்தார்கள்.
நேற்று (7-ம் தேதி) மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இந்த டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனைக்கான டோக்கன், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டது. உள்ளூர் ஆளும் கட்சியினர், 100 முதல் 200 டோக்கன்களை வாங்கிக்கொண்டு, அந்த டோக்கனை பிளாக்கில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்த அவலமும் நடந்தது. பள்ளியில் டோக்கன் கொடுப்பதை நாங்கள் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை” என்றார். இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் பிரவீன், ” இது அநீதியின் உச்சம். கிராமப்புற குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மது அருந்த டோக்கன் கொடுத்ததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது, வரலாற்றில் மிகப் பெரும் பிழை. ஒழுக்கத்தைப் போதிக்கும் பள்ளியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது” என்றார்.
இதுபற்றி ஓமலூர் பகுதி தாசில்தார் கணேசனிடம் கேட்டபோது, ”ஓமலூர் காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்த டோக்கன் கொடுப்பதாகக் கேள்விப்பட்டதும் பதறியடித்துப் போய் தடுத்து நிறுத்திவிட்டோம். மேற்கொண்டு அங்கு யாரும் மது விற்பனைக்கு டோக்கன் கொடுக்கவில்லை” என்றார் உறுதியாக.