உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை தொடக்கம்....பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/05/2020

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை தொடக்கம்....பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்


கோப்புப்படம்

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. இதில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி (நாளை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் 1.30 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. டெல்லியில் மட்டும் 380 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
உள்நாட்டு விமானச் சேவையில் பயணிக்கும் பயணிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
  1. பயணிகள் அனைவருக்கும் பயண டிக்கெட்டுடன் சேர்த்து என்ன செய்ய வேண்டும், தவிர்க்க வேண்டிய பட்டியல் அடங்கிய குறிப்பேடு விமான நிறுவனங்களால் வழங்கப்படும்.
  2. விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் தங்களின் மொபைல் போனில் செயலியைப் பதவிறக்கம் செய்திருக்க வேண்டும்
    .
  3. விமான நிலையங்கள், விமானம், ரயில் நிலையங்கள், ரயில்கள், பேருந்துகள், பேருந்து நிலையங்களில் பயணிகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முறையாக அறிவிக்கப்படும்.
  4. விமானம், ரயில், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவார்கள். அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  5. பயணம்செய்யும் போது அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், சூழலை சுத்தமாக வைத்திருத்தலையும் பின்பற்ற அறிவுறுத்தப்படும்.
  6. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  7. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சீரான இடைவெளியில் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். வெளியேறும் நுழைவாயில்களில் சானிடைசர், சோப்பு , நீர் போன்றவற்றைக் கைகளைச் சுத்தம் செய்ய வைத்திருக்க வேண்டும்.
  8. அனைத்து வெளியேறும் வாயில்களிலும் தெர்மல் ஸ்கேனிங் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பயணிகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
  9. அறிகுறியில்லாத பயணிகள் வீட்டில் 14 நாட்கள் சுயதனிமை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்
    . அந்த 14 நாட்களில் கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மாவட்ட மருத்துவ நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  10. பயணிகளில் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் பயணத்துக்கு முன்போ அல்லது சேருமிடத்துக்கு வந்தபின் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
  11. கரோனா அறிகுறிகள் மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் பயணிகள் உடனடியாக கோவிட்-19 சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
  12. கரோனா அறிகுறிகள் மிதமாக இருக்கும் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்துக்கொள்ளுதல், அல்லது கோவிட் தனிமை மையங்களில் தனிமைப்படுத்துதலுக்கு வாய்ப்பு தரப்படும். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். பரிசோதனையில் பயணிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஐசிஎம்ஆர் விதிப்படி சிகிச்சை அளிக்கப்படும்.
  13. பயணிக்குப் பரிசோதனையில் கரோனா இல்லை எனத் தெரியவந்தால், பயணி வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் சுயதனிமையில் இருக்க வேண்டும். அந்த 7 நாட்களில் மீண்டும் கரோனா அறிகுறி ஏற்பட்டால் மாவட்ட சுகாதார மையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.<

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459