தொழிற்சாலைகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

தொழிற்சாலைகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு


சென்னை : ஊரடங்கிற்கு பின், தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்த வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 17ம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளது.
அதன்படி,
* ஒவ்வொரு 2 அல்லது 3 மணி நேரத்திற்கும் ஊழியர்கள் தங்கள் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் சானிடைசர்கள் அளிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஓய்வறைகள், நாற்காலிகள், மேஜைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.
* தினசரி இருமுறை ஊழியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தொழிற்சாலைக்கு உள்ளே நுழையும் போது ஊழியர்கள் சானிடைசர்கள் பயன்படுத்தி, உடல் வெப்பநிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பணியின் போது முகக் கவசங்கள், கைக் கவசங்கள் அணிய வேண்டும்.
* தொழிற்சாலைகள் திறக்கப்படும் முதல் வாரத்தை பரிசோதனை வாரமாக கடைபிடிக்க வேண்டும்.
* முதல் வாரம் ஆலையின் ஒட்டுமொத்த கொள்திறனுக்கு உற்பத்தி செய்யக் கூடாது.
* அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களும், வழிமுறைகளும் பின்பற்றப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
* உடனடியாக அதிகப்படியான உற்பத்தியை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க கூடாது.
* தொழிலாளர்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை உபகரணங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்
. வழக்கத்திற்கு மாறான சத்தமோ, நாற்றமோ வெளிவந்தால் உடனே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலைமை விபரீதமாக இருந்தால் உடனே தொழிற்சாலையை மூட வேண்டும்.
* ஊரடங்கு நாட்களில் தினசரி சேமிப்பு கிடங்குகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
* அபாயகரமான வேதிப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட வேதிப்பொருட்களின் நிலைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* சேமிப்பகங்களில் போதிய காற்றோட்டம், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூரைகள் சேதமடைந்திருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்.
* தொழிற்சாலை வால்வுகள், பைப்புகள், பெல்ட்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஒட்டுமொத்த யூனிட்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா
என்று உறுதி செய்ய வேண்டும்.
* பைப்கள், உபகரணங்களை காற்று/ தண்ணீர்/ வேதிப் பொருட்கள் கொண்டு வழக்கமான முறைகளின் படி சுத்தப்படுத்த வேண்டும்.
* அனைத்து பைப்கள், கொள்கலன்களில் அழுத்தம் மற்றும் வெப்பநிலை சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* உற்பத்தி யூனிட்களில் கசிவுகள் ஏதும் ஏற்படாத வகையில் இறுக்கமான வகையில் மூடப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
* தொழிற்சாலைக்குள் நுழைவதில் இருந்து வெளியேறும் வரை அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது பற்றி அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும்.
* உற்பத்தி செய்யப்படும் மற்றும் சேமித்து வைக்கப்படும் பொருட்கள் அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். ஷிப்ட் முறையில் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* வேலை செய்யும் இடத்தில் ஊழியர்கள் போதிய சரீர இடைவெளியுடன் செயல்பட வேண்டும்.
ஊழியர்கள் முகம் முழுவதும் பாதுகாக்கப்படும் வகையில் ஷீல்ட் மற்றும் தனி நபர் பாதுகாக்கும் உபகரணங்களை அளிக்க வேண்டும்.
* 24 மணி நேரமும் பணியாற்றும் தொழிற்சாலைகள் ஷிப்ட்களுக்கு இடையில் ஒருமணி நேர இடைவெளி விட வேண்டும்.
* மேலாண்மை மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஒரு ஷிப்டிற்கு 33 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
* தனிமைப்படுத்தப்படும் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
* வெளியூரில் இருந்து பணியாற்றும் நகரங்களுக்கு திரும்பும் ஊழியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்
கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
* ஆபத்தான உபகரணங்களை கையாளும் ஊழியர்கள் மிகவும் அனுபவமிக்கவர்களாக, திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது.
* தொழிற்சாலைகளில், சமூக விலகல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் கூட்டமாக கூடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459