உங்கள் ஃபைல்களை ஒரு சொடுக்கில் டிஜிட்டல் வடிவில் மாற்றலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/05/2020

உங்கள் ஃபைல்களை ஒரு சொடுக்கில் டிஜிட்டல் வடிவில் மாற்றலாம்


பொறுப்புத் துறப்பு : 
நாம் நெடுங்காலத்துக்கு முன்பு நம் கைகளால் எழுதிவைத்த கட்டுரைகளையும், தகவல்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்ற விரும்புகிறோம்.
எழுதப்பட்ட தகவல்களைப் பார்த்து அவற்றை போனில் டைப் செய்ய நமது மதிப்புமிக்க நேரம் தேவையின்றிச் செலவாகும். அதுமட்டுமின்றி, இது நம் மனத்துக்கு சோர்வும் சலிப்பும் அளிக்கும் ஒரு வேலையாகவும் இருக்கும். ஆனால், நம்முடைய மொபைல் கேமராவை நாம் ஒரு சொடுக்கு சொடுக்கியவுடன், கைகளால் எழுதப்பட்டவை அனைத்தும் நமது போனில் டிஜிட்டல் வடிவில் மாறினால் எப்படி இருக்கும்!
எப்போதோ வாங்கிய நமக்கு மிக விருப்பமான ஒரு ஆடை கிழிந்துவிட்டது.
அதை போனில் ஒரு புகைப்படம் எடுத்து சொடுக்கினால், அந்த ஆடை மீண்டும் கிடைக்குமிடம் உள்ளிட்ட ஆடை குறித்த அத்தனை விவரங்களும் நொடியில் நம்முன் வந்தால் நன்றாக இருக்கும்தானே… நாம் ஒரு நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது உணவு உண்ண நினைக்கிறோம்.
ஒரு பிரபலமான கடையின் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தக் கடையின் பெயர்ப்பலகையை நம் போனில் புகைப்படம் எடுத்து சொடுக்கினால், அந்தக் கடையில் எந்தெந்த உணவுகள் நன்றாக இருக்கும், அவற்றின் விலை, சேவையின் தரம் மற்றும் கடையில் உள்ள அனைத்துவித உணவுகளின் ரிவ்யூஸ் என அனைத்துமே அடுத்த நொடியில் நம் கைகளில் கிடைத்தால் எப்படி இருக்கும்!
இவை மட்டுமல்ல, இவற்றையும் தாண்டி இன்னும் பற்பல விஷயங்களை நமக்கு சாத்தியமாக்கிக் கொடுக்கிறது கூகுள் லென்ஸ் (Google Lens).
கூகுள் லென்ஸ் என்றால் என்ன?
நம் கண்களால் பார்க்கக்கூடிய மற்றும் படங்களிலும், எழுத்துகளிலும் காணக்கூடிய ஏதேனும் ஒரு பொருள் குறித்த முழுமையான தகவல்களை உடனுக்குடன் அளிப்பதற்கான ஒரு மென்பொருள்தான் கூகுள் லென்ஸ்.
நாம் வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல விஷயங்களைக் கண்டறிய கூகுள் லென்ஸ் உதவுகிறது.
நமது கேமரா அல்லது போனில் உள்ள புகைப்படத்தைப் பயன்படுத்தி, நாம் பார்க்கும் பொருட்களைத் தேடவும், விஷயங்களை விரைவாகச் செய்யவும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ளவும் கூகுள் லென்ஸ் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்தும்போது, போனில் எதையும் நாம் டைப் செய்யவேண்டிய தேவையே இல்லை என்பதே இந்த கூகுள் லென்ஸ் மென்பொருளின் சிறப்பம்சம்.

Representational Image

கூகுள் லென்ஸின் பயன்கள்:
# போனில் சொற்கள் எதையுமே டைப் செய்யாமல், கூகுள் லென்ஸ் கேமராவை மட்டுமே பயன்படுத்தி சொற்களை ஸ்கேன் செய்வதன் மூலம், நாம் மொழிபெயர்ப்புகள் செய்துகொள்ள முடியும்.
# நம் கைகளால் எழுதிய அல்லது அச்சிடப்பட்ட வடிவில் உள்ள எழுத்துகளை நொடியில் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும்.
# நம் கண்களால் பார்க்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் புகைப்படம் எடுத்து, அந்தப் பொருளின் இயல்பு,
தனித்தன்மைகள், கிடைக்கும் இடங்கள், விலை, பின்னூட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருள் குறித்த முழுமையான விபரங்களை உடனே பெற முடியும்.
# நமது மொபைல் போனில் உள்ள படங்களில் உள்ள பொருள்கள் பற்றிய முழுமையான விபரங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். எழுதப்பட்ட கடினமான குறியீடுகளையும் உடனுக்குடன் டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ள முடியும்.
# ஏதேனும் ஷாப்பிங் செல்லும்போது, அங்கு நாம் வாங்க விரும்பும் பொருள்களைப் புகைப்படம் எடுத்து, பல்வேறு கடைகளில் அதன் விலைகள், ஆன்லைனில் அதனுடைய விலை, தற்போது நாம் பார்க்கக்கூடிய கடையில் பொருளின் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்க முடியும். விலையை மட்டுமல்லாது தரம், நிறம் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
# ஒரு ஹோட்டலின் பெயர்ப்பலகையை அல்லது ஹோட்டலின் மெனு கார்டில் உள்ள உணவுப் பொருள்களின் படங்களை புகைப்படம் எடுப்பதன் மூலமாக, அந்த ஹோட்டலில் கிடைக்கும் உணவுப் பொருளின் விலை, தரம், அளவு, முன்பு சாப்பிட்டவர்களின் ரிவ்யூஸ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனே நாம் பெற்றுவிட முடியும்.
எவ்வாறு பயன்படுத்துவது?
ப்ளே ஸ்டோரில் கூகுள் லென்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். மேலும், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றிலும் கூகுள் லென்ஸ் பட்டன் இருக்கும். அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூகுள் லென்ஸுக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும், நாம் கைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றுவது இதன் முக்கியமான ஒரு பயன் ஆகும்.
இவ்வாறு கைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றுவது என்பது இன்று அனைவருக்குமே தேவையாக இருக்கிறது.
ஆனால், எழுதியதைப் பார்த்து டைப் செய்வது சலிப்பான ஒன்றாகவே நமக்கு இருந்துவருகிறது. கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளை ஸ்கேன் செய்து, அவற்றை நொடியில் டிஜிட்டல் வடிவத்திற்கு கூகுள் லென்ஸ் மாற்றிவிடும்.

Representational Image

கைகளால் எழுதிய சொற்களை கேமராவின் ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்ற முடியும் என்பது
சிலருக்கு ஆச்சர்யமூட்டலாம். நமது போன் கேமரா உதவியுடன் கூகுள் லென்ஸ் இதை சாத்தியமாக்கியுள்ளது.
கைகளால் எழுதிய எழுத்துகளை அல்லது புத்தகங்களில் பிரின்ட் ஆகியுள்ள எழுத்துகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யவும், அவற்றை காப்பி செய்து நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்யவும் கூகுள் லென்ஸ் உதவுகிறது.
மேலும், நாம் கேமரா மூலம் ஸ்கேன் செய்த எழுத்துகள் மற்றும் சொற்களில், நமக்குத் தேவையான குறிப்புகளை மட்டுமே தேர்வு செய்யவும் முடியும். தேர்வு செய்த சொற்களைக் காப்பி செய்து, அதை உங்கள் போனில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பேஸ்ட் செய்துகொள்ளவும் முடியும்.
கைகளால் எழுதியவற்றை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றும் முறை:
*கூகுள் லென்ஸை ஓப்பன் செய்து, நாம் காகிதத்தில் எழுதியுள்ள கையெழுத்துக் குறிப்புகளை நோக்கி கூகுள் லென்ஸ் கேமராவை வைக்கவும்.
*எழுத்துகளுக்கு நேராக கேமராவை வைத்து புகைப்படம் எடுக்கவும் (Scan)
*ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தில் இருந்து நாம் டிஜிட்டல் வடிவில் மாற்ற விரும்பும் குறிப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும்
. (Select Text) தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மட்டும் நீலநிறமாக மாறும்.
*அடுத்து, கீழே தோன்றும் காப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும். (Copy Text)
*தற்போது, நாம் தேர்வுசெய்த நம்முடைய குறிப்புகள் போனில் நகலாக மாட்டப்பட்டிருக்கும். (Copied to Clipboard)
*இறுதியாக, நாம் இதை தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.(Paste)

Representational Image

நாம், கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பழத்தின் படத்தை எடுத்தால், பழத்தை மட்டுமே அது அடையாளம் காணாது. பழத்தின் விலை, பருவம், நமது பகுதியில் பழக்கடைகள் எங்கே உள்ளன என்பது உள்ளிட்ட பிற பயனுள்ள தகவல்களையும் நமக்கு வழங்கும். அந்தப் பொருளின் சூழலைப் புரிந்துகொண்டு, அதை மனிதர்களுடன் பகிர்ந்துகொள்வதாய் இருக்கிறது.
கூகுள் லென்ஸ் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் தொடர்பு கொள்ளும் பல விஷயங்களைப் பற்றிய தகவல்களை சிறப்பாக வழங்கக்கூடிய ஒன்று. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களுக்கும் இது சிறந்ததொரு பயனை அளிக்கும்
. கூகுள் லென்ஸ், செயற்கை நுண்ணுணர்வின் ஒத்துழைப்புடன் இயங்கும் ஒரு சிறந்த மென்பொருள்!
– அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க


My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459