வாட்சப் வழியாக பாடம் கற்கும் மாணவர்கள்.. ஆன்லைனில் தொடரும் படிப்பு!* - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/05/2020

வாட்சப் வழியாக பாடம் கற்கும் மாணவர்கள்.. ஆன்லைனில் தொடரும் படிப்பு!*



தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

               

               கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில்,  வீட்டில் இருக்கும் மாணவர்கள் டி.வி. பார்ப்பது மற்றும் சின்ன, சின்ன சேட்டைகளை செய்து பெற்றோருக்கு இடைஞ்சலையும் உருவாக்குவதாக தெரிகிறது.ஊரடங்கும் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது ஒரு புதுவிதமான சோம்பேறித்தனம் உருவாகும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில், ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலைமை  ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் வழியாக பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர்.  பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பவர்கள் என்பதால் ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் உள்ளது. அந்த ஒரு சில மாணவர்களின் வாட்ஸப்பை பயன்படுத்தி  வகுப்பு வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது . வாட்சப் மொபைல் இல்லாத மாணவர்களுக்கு தினசரி மொபைல் வழியாக பெற்றோர்களிடம் பேசி குறிப்பிட்ட பாடப்பகுதியை படிக்கச் சொல்லி அதனை பெற்றோர்களை கண்காணிக்குமாறு ஆசிரியர்களால் தினமும் அறிவுறுத்தப்படுகிறது.
இது மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களும் மொபைல் வழியாக பாடம் நடத்துவதை ஆர்வத்துடன்   செய்து வருவதாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.ஆசிரியர்களும் தங்கள் ஊரடங்கை வீணடிக்காமல் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது பெரும் பாராட்டுக்குரியதாகும். அதிலும் பெண் ஆசிரியைகள் வீட்டையும் பார்த்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருவதற்கு ஒரு சபாஷ்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459