*"கொடுந்தொற்று தாக்குதலும்,அரசு ஊழியர்கள் மீதான தாக்குதலும்"* *-ச.மயில்**பொதுச் செயலாளர்**தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*(13.05.2020-தீக்கதிர் நாளிதழ் கட்டுரை)*
*கொரோனா நோய்த்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. மனித குலத்திற்கு மாபெரும் தீங்காக கொரோனா வந்துவிட்டது. உலகின் பணக்கார நாடுகளெல்லாம் மரண பீதியில் விழிபிதுங்கி நிற்கின்றன. உலகையே சில நிமிடங்களில் அழித்து விடுகின்ற அளவிற்கு வல்லமை பெற்ற அணு ஆயுதங்களைக் கொண்ட வல்லரசு நாடுகளெல்லாம் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசின் கொடுந்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அச்சத்தின் உச்சத்தில் உள்ளன. இந்தியாவும் கொரோனா தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய அரசு கூறினாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பது பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 25.03.2020 முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இந்தியப் பிரதமர் மக்களைக் கைதட்டச் சொன்னார். விளக்கேற்றச் சொன்னார். மக்கள் சொன்னதையெல்லாம் செய்தார்கள். ஆனால், மத்திய அரசாங்கம் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க இதுவரை என்ன செய்தது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறிவிட்டது. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல படும்பாடு, இரண்டாம் உலகப் போரின் போது அப்பாவி மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள தங்கள் இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்து சென்றதை நினைவூட்டுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 1.9 சதவீதம் என்ற அளவிற்கு அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இது 1930 ஆம் ஆண்டில் இருந்த இந்தியாவின் பொருளாதார நிலையோடு ஒப்பிடத்தக்கது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோய்த்தொற்றால் மட்டும் இதுபோன்ற நிலை ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடே இது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் கூட மத்திய அரசு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதிகளைக் கூட தர மறுக்கிறது. அந்த நிதியை வாதாடி, போராடிப் பெறுகிற தைரியமும் துணிச்சலும் தமிழக அரசுக்கு இல்லை. எனவே, தமிழக அரசு எடுத்த எடுப்பிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கத் தொடங்கிவிட்டது. மத்திய அரசைப் பின்பற்றி அரசு ஊழியர்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது உயரும் விலைவாசிக்கேற்ப உயரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகும். விலைவாசியையும் கட்டுப்படுத்தமாட்டோம். அகவிலைப்படி உயர்வையும் தர மாட்டோம் என்று அரசு சொல்வது மிகப்பெரிய மோசடித்தனமாகும்.
அதேபோன்று ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் உரிமையையும் ஓராண்டுக்கு தமிழக அரசு நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது. காலங்காலமாகப் பெற்று வந்த இந்த உரிமையை ஒரு அரசாணையின் மூலமாகப் பறித்துள்ளது அரசு. அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைத்துள்ளது தமிழக அரசு. “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்பதைப்போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடிமடியில் கை வைத்துள்ளது தமிழக அரசு. கடந்த 07.05.2020 அன்று தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு அரசாணையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58லிருந்து 59ஆக உயர்த்தியுள்ளது. இதைத் தொழிற்சங்கப் பார்வையோடும், பொதுநல நோக்கோடும், பகுத்தறிவோடும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.
ஏனெனில், ஓய்வு பெறும் வயதை தற்போது உயர்த்த வேண்டும் என்று எந்த ஆசிரியரும், அரசு ஊழியரும் அரசிடம் கேட்கவில்லை. திடீரென தமிழக அரசு இவ்வாறு உயர்த்தியதில் மிகப்பெரிய உள்நோக்கம் உள்ளது.
அது புரியாமல் ஒரு சில அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் அதை ஆதரித்துப் பதிவிடுவது என்பது அவர்களது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
2020 மே மாதம் முதல் 2021 மே மாதம் முடிய தமிழ்நாட்டில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 25000 பேர் வரை வரும் என்று கூறுகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குப் பணிக்கொடை, ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறுதல் உள்ளிட்ட பணப்பலன்களை அளிக்க வேண்டுமென்றால் சுமார் 6000 கோடிக்கு மேல் பணம் தேவைப்படும். ஆனால், தமிழக அரசோ நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. 4.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இதன் விளைவுதான் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது என்பது. இதை வரவேற்கும் சிலர் அடுத்த ஆண்டு 59 வது வயதில் ஓய்வு பெறும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் ரொக்கமாக முழுமையாகக் கிடைக்குமா? என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அம்மா ஆட்சியில் 2003 ல் நடைபெற்ற கடந்தகால நிகழ்வுகள் சில கசப்பான அனுபவங்களை நமக்கு கற்றுத்தந்துள்ளன.
அப்படி ஒரு நிலை வந்தால் ஓய்வுக்காலப் பலன்களைப் பெற்று சொந்தமாக வீடு கட்டலாம் என்றும், குழந்தைகளின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளை நடத்தி விடலாம் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கடன்களை அடைத்துவிட்டு ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்றும் திட்டமிட்டிருந்தவர்களின் நிலை என்னவாகும்? ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது என்பது தற்போது பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பையும் தடுத்துள்ளது.
அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்களுக்கு மிகவும் சாதகமானது என்று கூறுபவர்கள், உரிமைக்குப் போராடிய 7000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொண்ட 17(ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் கடந்த 18 மாதங்களாக திரும்பப் பெற மறுத்து, அவர்களுக்குப் பணி ஓய்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றை மறுக்கும் தமிழக அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறுவது தான் மிகவும் வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஓராண்டாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அடிக்கடி கூறி வந்தார்
. மேலும், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை வழக்கமான பணி நீட்டிப்பும் இல்லை என்று கூறி வந்தார்கள். இப்படியெல்லாம் கூறி வந்தவர்கள் தற்போது திடீரென ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியது எதற்காக என்று சிந்தித்தால் இதன் உள்நோக்கம் புரியும். இதே நிலை நீடித்தால் தமிழக அரசின் அடுத்தடுத்த தாக்குதல் இலக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே இருப்பார்கள். கடந்த ஒன்றரை மாத காலத்திலேயே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக 4 அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஊழியர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் எவரும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும், இயக்குநர்களும், அரசு உயர் அலுவலர்களும் மட்டுமே இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கும் இக்குழுவின் மிக முக்கிய இலக்காக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுமே இருக்க அதிக வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் பரிந்துரைகளை அக்குழு அளிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தமிழக அரசின் உள்நோக்க நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் செயல்படுவதே ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனுக்கும் நன்மை பயக்கும்.