கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் \"ஹெர்ட் இம்யூனிட்டி\" எனப்படும் \"மந்தை நோய் எதிர்ப்பு சக்தி\" முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்....
ஒட்டுமொத்த உலகத்தையும் தன் கோரப்பிடிக்குள் கொண்டுவந்து ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ்.
வல்லரசு நாடுகள் தொடங்கி, வளரும் நாடுகள் வரை அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கின்றன.
பெரியம்மை, போலியோ போன்ற கொடிய நோய்களை கடந்து வந்துவிட்ட மனித சமூகம் கொரோனாவுக்கும் நிச்சயம் மருந்து கண்டுபிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் அதற்கு 6 மாதங்களில் இருந்து ஓராண்டு கூட ஆகலாம் என கணிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த “ஹெர்டு இம்யூனிட்டி” எனப்படும் \'மந்தை நோய் எதிர்ப்பு சக்தி’ முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகப்படியான மக்கள் ஒரு நோய்க்கு எதிராக தடுப்பாற்றல் பெறுவதன் மூலம், அந்த நோய் மற்றவர்களுக்கு, அதாவது தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தும் சக்தியை ஹெர்ட் இம்மியூனிட்டி என்று கூறுகின்றனர். இதனை சமூகத்தில் நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி என்றும் பொருள் கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
75 விழுக்காடு 40 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட இந்திய சமூகத்தில் அவர்களை சுதந்திரமாக உலவ விடுவதன் மூலம் இயல்பாகவே அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது இதன் அடிப்படை என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் 60 முதல் 65 வயதைக் கடந்த முதியவர்களை குறிப்பிட்ட சில மாதங்களுக்குத்
தனிமைப்படுத்திவிட வேண்டும் என்பதும் இந்த ஹெர்ட் இம்மியூனிட்டி பிரதானமாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சந்தைகளில் இருந்து வாங்கி வரப்படும் காய்கறிகள் மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் மருத்துவர் செந்தூர் நம்பி.
அரசு பரிந்துரைக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான சுயசுத்தம், தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்றுவதும் மிக முக்கியமானது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.