கோப்புப்படம்
*TNPTF மாநில மையம்*
*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:20.05.2020*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே! வணக்கம்.*
*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் அடிக்கடி அதிரடியான அறிவிப்புக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும், அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன் அதைத் திரும்பப் பெறுவதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.
அந்த வகையில் ஒன்றுதான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் ஒன்றாம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தது. அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையிலும் முந்தைய நாள்வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் "ஜுன்-1ல் தேர்வு நடந்தே தீரும்" என்று அறிவித்தது தான் மிகப்பெரிய வேடிக்கை.தற்போது ஜூன்-15 க்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.நோய்த்தொற்று தணியாத சூழலில் ஜூன்-15ல் தேர்வு என்று அறிவித்ததும் பொருத்தமானதல்ல.*
*இதேபோல் முன்பு "5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடந்தே தீரும்" என்று உறுதிபடக் கூறினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள், அரசியல்கட்சிகள் என அனைவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் முந்தைய நாள்வரை தனது கருத்தில் உறுதியாக இருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.மறுநாள் 5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.*
*பொதுவாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயலை நடைமுறைப்படுத்த முயலும்போது தீர ஆராய்ந்து,துறை வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, நுணுக்கமாக முடிவு செய்து, சூழலுக்கு ஏற்றபடி நடைமுறைப் படுத்துவதுதான் சரியானதாக இருக்கும். அவ்வாறன்றி அவசர கோலத்தில் அறிவித்துவிட்டு எழுகின்ற எதிர்ப்புக்களை எல்லாம் எட்டி உதைத்து விட்டு,அதை நடைமுறைப்படுத்த முயலும் போது இது போன்ற நிலைதான் ஏற்படும் என்பதற்கு மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் சான்றாகும்.*
*தோழர்களே!04.05. 2020 அன்று நமது இயக்கத்தின் மாநில செயற்குழு காணொளி வழியே நடைபெற்றது. அதன் மூலம் தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்களில், இயக்கச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் எப்போதும் முன்னணியில் நிற்கும் நம் பேரியக்கம் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் முன்னணியில் நின்று அதை நிரூபித்தது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, ராமநாதபுரம்,விழுப்புரம்,வேலூர்,திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காணொளி வழியே செயற்குழு நடத்தி,இந்த ஊரடங்கு நேரத்திலும் இயக்கச் செயல்பாடுகளை முன்னெடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது
. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட சில வட்டாரக்கிளைகள் கூட காணொளி வழியே செயற்குழுக் கூட்டங்களை நடத்தி இயக்க நிகழ்வுகளுக்கு வலிமை சேர்த்திருப்பது உற்சாகம் தரக்கூடிய நிகழ்வுகளாகும்.*
*இயக்கச் செயல்பாடுகளை கடந்த காலங்களைப் போல் கள நிகழ்வுகளின் மூலம் முன்னெடுக்க இயலாத தற்போதைய சூழலில், இத்தகைய சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாத இன்றைய நிலையில், சூழலுக்கு ஏற்ப இயக்க நிகழ்வுகளை உரிய தளத்தில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நம் பேரியக்கத் தோழர்கள் புரிந்துகொண்டு செயல்படுவது தற்போதைக்கு அவசியமாகிறது.*
*எத்தனை தடைகள் எதிர்கொண்டு தடுத்தாலும்,அத்தனை தடைகளையும் காட்டாற்று வெள்ளம் போல் தகர்த்தெறிகின்ற வலிமை கொண்ட இயக்கம் நம் பேரியக்கம்.தடைகளையே விடைகளாக்கி சரித்திரச் சக்கரத்தைச் சுழலச் செய்து இயக்க வரலாற்றை எழுதுகின்ற இணையற்ற களப்போராளிகளின் பாசறைக்கூடம் தான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*எனவே, காலச்சக்கரத்தின் சுழற்சியில் காலம் சந்தித்திராத கோலமாய், கற்பனைக்கும் எட்டாத கள நிகழ்வாய் கொரோனா பூமிப்பந்தையே புரட்டிப் போட்டுவிட்டது.புரட்டிப் போடப்பட்ட பூமிப்பந்தை நெம்புகோல் கொண்டு நிமிர்த்துகின்ற வல்லமை மனித இனத்திற்கு உண்டு
என்ற தன்னம்பிக்கையோடு முன்னேறுவது தான் மனித மாண்பு.*
*எனவே,இக்கட்டான சூழலிலும் இயன்ற முறையில் எதிர்கால இயக்கக் கடமைகளை நிறைவேற்ற தொடர் பணிகளை மேற்கொள்வது என்பது கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நம் பேரியக்கத் தோழர்களின் பெருங் கடமை என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விடுகிறேன்.*
*எனவே,கூட்டம் கூடி, கருத்துப் பரிமாற்றம் செய்து இயக்கத்தின் கள நிகழ்வுகளை முன்னெடுக்கும் வரை காத்திராமல், காணொளி வழியே கூட்டங்களை நடத்தி முகம் கண்டு,அகம் அறிந்து,கூட்டுச் சிந்தனை,கூட்டு முடிவு, கூட்டு முயற்சி என்ற நம் பேரியக்கத்தின் தாரக மந்திரத்தை நிறைவேற்ற அன்பின் உறைவிடமாய், ஆற்றலின் இருப்பிடமாய் விளங்கும்
நம் இயக்கத் தோழர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*திட்டமிட்டபடி நம் இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்களை நடத்தி இயக்க ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கவேண்டும். அதற்காக ஜூன்-2020 மாதத்திற்குள் வட்டார, நகரக் கிளைகள் தணிக்கை முடிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் வட்டார, நகரக் கிளைகளின் தேர்தல்களை நடத்த வேண்டும்.செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாவட்டக் கிளைத் தேர்தல்களை நடத்த வேண்டும். டிசம்பருக்குள் மாநிலத் தேர்தலை நடத்திட வேண்டும்.
இந்த நிகழ்வுகள் நடைபெற மாவட்ட,வட்டார, நகரக் கிளை பொறுப்பாளர்கள் தங்கு தடையின்றி பணியாற்ற வேண்டியது அவசியம்.*
*திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டக் கிளைகள் இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்களை திட்டமிட்டபடி நடத்திட மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. இயக்கத்தின் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்திட மாநிலச் செயற்குழுவால் அமைக்கப்பட்டுள்ள திருத்தக்குழுவிற்கு 31.05.2020க்குள் மாவட்ட,வட்டார,நகரக் கிளை அமைப்புக்களும், தனிநபர்களும்(இயக்க உறுப்பினர்கள்) தங்கள் கருத்துக்களை தெரிவித்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் அமைப்பு முறைகளிலும், அமைப்பு விதிகளிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ள திருத்தக் குழுவிற்கு ஆழமான,அழுத்தமான, நுணுக்கமான,இயக்க வளர்ச்சியோடு பிண்ணிப் பிணைந்த கருத்துக்களை அனுப்புவதில் நம் இயக்கத் தோழர்கள் கண்ணும் கருத்துமாய் செயல்பட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment