முதுநிலை மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடில் அநீதி -அன்புமணி - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2020

முதுநிலை மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடில் அநீதி -அன்புமணி



முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.80% தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அப்பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, இன்று (மே 8) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசுக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 9,550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும் இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5-ம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைந்த முதல்கட்ட கலந்தாய்வில் 9,550 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இடங்களையும் அவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிட்டுதான் வென்றுள்ளனர். இது முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்ட ஒட்டுமொத்த இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும்.

பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவினர் 7,125 இடங்களை, அதாவது 74.60 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் மேலாக உயர்வகுப்பைச் சேர்ந்த ஏழைகள் பிரிவுக்கு 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,
அவற்றில் சுமார் 7%, அதாவது 653 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த சமூக அநீதிக்குக் காரணம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம், பழங்குடியினம், உயர்வகுப்பு ஏழைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாததுதான்.
2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009-ம் ஆண்டு முதல் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தின்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியலினம், பழங்குடியினருக்கு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், மத்திய கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டப்படி உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இயலாது என்று கூறுவதை ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம்தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது.
அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்தான் எனும்போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது நியாயமல்ல.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 24 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் 1,758 இடங்கள் உள்ளன. அவற்றில் 50%, அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50% இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கும்
.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது கிடைத்துள்ள இடங்களை அளவீடாகக் கொண்டால், 440 இடங்கள் கிடைக்க வேண்டியதற்குப் பதிலாக 33 இடங்கள் மட்டும்தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கக்கூடும். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடந்த அக்டோபர் 21-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
அதற்குப் பதிலளித்து ஜனவரி 16-ம் தேதி ஹர்ஷ்வர்தன் எனக்கு எழுதிய கடிதத்தில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மத்திய கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு சட்டப்படியான இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில், நீதிமன்ற வழக்குகள் ஒரு பொருட்டல்ல.
ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குதான் இதற்குக் காரணம் என்று வைத்துக் கொண்டாலும், 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட அந்த வழக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல்
இருப்பது சமூக நீதிக்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது. இந்த சமூக அநீதி உடனடியாக போக்கப்பட வேண்டும்.
அதற்காக உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகள்தான் இதற்கு தடையாக இருப்பதாக கருதினால், அவை அனைத்தையும் விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459