பேஸ்புக் நண்பர்கள் மூலம் 300 மாணவர்களுக்கு உதவி : அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/05/2020

பேஸ்புக் நண்பர்கள் மூலம் 300 மாணவர்களுக்கு உதவி : அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்


கொரோனா பீதியால் கடந்த சில வாரங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதனால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. அதேபோல, ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ப்ளஸ் டூ தேர்வுகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், மற்ற வகுப்புகளுக்கு ஆல்பாஸ் உத்தரவு போடப்பட்டுவிட்டது.


மாணவர்கள்

மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை என்றாலும், பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் வீடுகள் வறுமையில் வாடுவதால், அவர்களுக்கு இந்த விடுமுறை ரணமாகியுள்ளது. வேலைக்குச் செல்ல முடியாத தினக்கூலிகள் வீட்டிலேயே முடங்கி, பசி அவர்களை வதைத்துக்கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது மூலத்துறை என்ற கிராமம். விவசாயம், நெசவு, தினக்கூலிகள்தான் மூலத்துறையின் அடையாளம். அங்கு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ர.பரமேஸ்வரன் முகநூல் நண்பர்களை ஒருங்கிணைத்து, பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கியுள்ளார்.


ஆசிரியர் பரமேஸ்வரன்

இதுகுறித்து பரமேஸ்வரனிடம் பேசியபோது, “எங்கள் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர்தாம் அதிகம்.
ஊரடங்கு அவர்களின் வறுமையை மேலும் அதிகரித்துவிட்டது. ஊரடங்கு தொடங்கிய சில நாள்களிலேயே அவர்களின் சேமிப்பு கறைந்துவிட்டது. மளிகைப் பொருள்களும் உணவும் அவர்களின் பசியைப் போக்கும் என்றாலும், அவர்களுக்கு ஏதாவது வகையில் பண உதவி செய்தால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன் என முகநூலில் பதிவு செய்தேன். பல நண்பர்கள் உதவி செய்தனர்.
அதன் மூலம், ரூ.2,20,000 கிடைத்தது.


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி

மூலத்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், காந்தவயல், புதுக்காடு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உதவலாம் என்று முடிவு செய்தோம். மொத்தம் 302 மாணவர்களின் பட்டியலை எடுத்தோம்.
அவர்களை மிகவும் பின்தங்கிய மாணவர்கள், பின் தங்கிய மாணவர்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரித்தோம்.
மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்குத் தலா ரூ.1,000, பின் தங்கிய மாணவர்களுக்கு தலா ரூ.500 வழங்கினோம். இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக வழங்கினோம். அனைத்து மாணவர்களிடமும் அந்தப் பணத்தை அம்மாவின் கையில்தான் தர வேண்டும் என்று கூறியுள்ளோம். தனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்கும்
. ஆனால், அரசுப் பள்ளி பணம் கொடுத்து உதவி செய்யும்.


மாணவர்களுக்கு உதவி

இப்போது பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்து வருகின்றனர். இது மிகுந்த மனநிறைவைத் தருகிறது” என்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459