இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றி வருகிறார்.அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கொரோனா வைரசுக்கு இந்த நாடு பலரை இழந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல் வேதனை அளிக்கிறது. ஒரு வைரஸ் உலத்தில் பெரும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இது நிச்சயமாக மனிதகுலத்திற்கு கற்பனை செய்ய முடியாதது. இது முன்னர் நடந்திராதது. ஆனால் இந்த வைரஸிடம் மனிதகுலம் தோற்காது. நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முன்னேற வேண்டும். கொரோனா பாதிப்பு தொடங்கியபோது பிபிஇ கிட்கள் நம்மிடம் கிடையாது. என்95 மாஸ்க் தயாரிக்கவில்லை. இப்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் உருவாக்கி வருகிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது
. இந்தியா சுயசார்பு அடைவது உலகத்திற்கே நல்ல செய்தி. உலகத்திற்கே, இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும் என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தியா இந்த இக்கட்டான நிலையை, வாய்ப்புகளை உருவாக்குவதற்கான இடமாக மாற்றிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டு மக்களுக்கு உதவி வருகிறது.21ம் நூற்றாண்டு நமக்கானது.. உலகையே இந்தியாதான் இனி வழி நடத்த போகிறது.. பிரதமர் மோடி நம்பிக்கை! இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும். வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால் இந்த நிதியை பயன்படுத்திக்கொண்டு நாடு முன்னேறும் என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு மோடி பேசிக்கொண்டு இருக்கிறார். மே 3ஆம் தேதி முதல், மூன்றாவது கட்ட ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமலில் உள்ளது. 17ம் தேதியுடன் இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.