புதுடெல்லி:
டெல்லி மாநகராட்சி பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணிபுரிந்தவர் பைகாலி சர்கார். தற்போது கொரோனா பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், இவர் அரசின் நிவாரண மையத்தில் இருந்து உணவுகளை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
கடந்த மாதம் 24-ந் தேதி முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பணிக்கு செல்லாத நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் போலவே இந்த மாதமும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.