துபாய்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லட்சக்கணக்காண இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்கள் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தின் உதவியை நாடி வருகின்றனர். இதையடுத்து கடந்த வாரம் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் துபாயில் உள்ள துணைத்தூதரகம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்காக தூதரகம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, www.indianembassyuae.gov.in அல்லது www.cgidubai.gov.in மற்றும் www.cgidubai.gov.in/covid_register என்ற இணையதளத்தில் இந்தியர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம்’ எனத் தெரிவித்திருந்தது.
1/2 Registration in database of Indian nationals wishing to travel back to India under Covid 19 situations
— India in Dubai (@cgidubai) April 29, 2020
இந்திய தூதரகத்தின் இந்த இணையதளத்தில், கடந்த மாதம் 29ம் தேதி முதல், நேற்று (2ம் தேதி) மாலை வரை, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரி நீரஜ் அகர்வால் கூறுகையில் ‘தாயகம் திரும்ப 1.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். 40 சதவீதம் பேர் கட்டிட வேலை, தூய்மை பணி உள்ளிட்ட சாதாரண பணியைச் செய்பவர்கள். இதுவரை வந்த விண்ணப்பங்களில், 55 சதவீதம் கேரள மாநிலத்தவர்களுடையது. தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்யும் போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்