ஒரு சினிமாவை பார்த்து விட்டு மறுபடியும் மறுநாள் அதே சினிமாவை பார்ப்பார்கள். அது போல நான் நேற்று 17.04.2020 படித்த 22 வது புத்தகம் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர். கி.இராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் நாவலை இன்றும் 18.04.2020 படித்தேன்.
அவற்றில் வரும் சம்பவம்,பெயர்கள் அவற்றின் உறவுமுறை தெரிந்து கொள்வதற்காக படித்தேன். 40 அத்தியாயங்களை உள்ளடக்கி 176 பக்கங்களை கொண்ட நாவல்.கோபல்ல கிராமத்தின் கதையை சொல்பவர் 137 வயதை உடைய மங்கத்தாயாரம்மாள் என்கிற பூட்டி. கம்மவார் பெயர் வந்ததிற்கான காரணம் காது வளர்த்து வளையம் போன்ற கம்ம என்ற காது ஆபரணத்தை பெண்கள் அணிந்து கொள்வதால் இப் பெயர் வந்தது. பூட்டியின் பெரியப்பா பெரிய செல்வந்தர்.பெரியப்பாவின் மகளான சென்னா தேவிக்கு மாணிக்க மாலை செய்வதற்காக கெம்பு கற்கள் ரத்ன வியாபாரியான இரண்டு துலுக்கர்களிடம் கேட்டார். அப்போது சென்னா தேவியின் அழகைப் பார்த்து அதிசயத்து விட்டனர்
. இந்த விசயத்தை துலுக்க ராஜாவிடம் சொல்கிறார்கள். ராஜாவும் உடனே சென்னா தேவியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். தனது ஆட்களை அனுப்பி சென்னா தேவியை அவர்கள் குடும்பத்துடன் அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது. சென்னா தேவி குடும்பத்தார் தப்பிக்க முடியாமல் உடன்பட்டு ராஜாவின் ஆட்களுடன் செல்கிறார்கள் .அங்கு தங்குவதற்கான ஏற்பாடு செய்யப் பட்டு விருந்திற்கான சமையல் வேலை நடந்து கொண்டிருக்கிறது.பெண் வீட்டாரில் ஒருவர் சமையல் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பெரிய கூடையை தூக்கி பார்க்கிறார். உள்ளே பசு மாட்டின் தலை இருக்கறது. உடனே பெண் வீட்டாரிடம் பசு மாட்டு கறி உணவு தயாரிக்கப்படுவதை சொன்னவுடன் மிரண்டு இனியும் இங்கிருக்க கூடாது
. தப்பிவிட வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. சென்னா தேவியும் ராஜாவின் ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு சாதாரண உடையில் வெளியேறுகிறாள். ஆந்திராவில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கிறார்கள். இடையில் பல ஆபத்துக்களை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீரங்கத்திற்கு சில மைல்கள் இருக்கும் போது சென்னா தேவி இறந்து விடுகிறாள். அந்த இடத்திலேயே அடக்கம் செய்து விட்டு பயணம் தொடர்கிறது .ஒTரு காட்டை அடைந்தவுடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை அழித்து விவசாயம் பண்ணுவதற்கும், தங்குவதற்கு வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுத்த முடிவு எடுத்து அதற்கான வேலையை செய்கிறார்கள். அருகில் சிறிய கிடங்காக இருந்ததை குளமாக உருவாக்குகிறார்கள். ஒரு நாள் அக்குளத்தில் ஒரு சினையுள்ள பசு மாடு குளத்தின் சேற்றில் சிக்கிக் கொள்கிறது.அதனை மீட்டு வளர்க்கிறார்கள்.
அப் பசு கன்றை ஈனுகிறது. தாங்கள் உருவாக்கிய கோபல்ல என்று பேர் வந்ததே இந்த கிராமத்திற்கு பசு வந்ததே காரணம். அதன் பின்பு நாரணப்ப நாயக்கரின் 7 மகன்கள் மற்றும் ஒரு மகளை வைத்து கோட்டை நாயக்களின் கதை நகர்ந்து செல்கிறது.கதை அருமையாக எளிய வார்த்தைகளால் சொல்லப்பட்டு வருகிறது. அருமையான நாவல் கோபல்ல கிராமம் .. தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் முதன்மையான நாவல். அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.படித்து பயன் பெறுங்கள்.
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி.