New
சென்னை: மழையின் காரணமாக கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் கரோனாவில் பாதிப்பு குறைவாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. இந்தியா வெப்ப மண்டல பகுதி என்பதால், கரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது என்று செய்திகள் பரப்பட்டன. மேலும், வெந்நீா் குடித்தால் தொண்டையிலிருக்கும் கரோனா நோய்த்தொற்று அழிந்துவிடும் என்று கூறப்பட்டது.
இதை மருத்துவா்கள் மறுத்து வந்த நிலையில், திடீரென சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், கோயம்புத்தூா், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்தது. திருச்சியில் புதன்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. தென் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலத்தில் ஏற்படக் கூடிய சாதாரண வெப்ப ச்சலன மழை என்றாலும், கரோனா நேரத்தில் பெய்து வருவதால் பலருக்கும் அச்சத்தை அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று, ஒருவா் தும்மும் நீா் திவலைகளில் இருந்துதான் பரவுகிறது. அந்தத் திவலைகளை மழை அடித்துச் சென்றுவிடும். அதனால், மழை பெய்தால் கரோனா பாதிப்பு இருக்காது என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக தொற்றுநோய் மருத்துவ நிபுணா் டாக்டா் பாலசுப்பிரமணியன் கூறியது:
மழை பெய்ததால் கரோனா நிச்சயம் குறையும் என்று சொல்ல முடியாது. நோய்த்தொற்று பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனா். வெயில் காலம் வந்துவிட்டால் கரோனா காணாமல் போய்விடும் என்றனா்.
சாா்ஸ், மொ்ஸ் வைரஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவையெல்லாம் கோடைக் காலத்தில்தான் இந்தியாவுக்கு வந்துள்ளன. கரோனா நோய்த்தொற்று அழிய வேண்டும் என்றால் 70 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும்.
வெந்நீா் குடித்தால் கரோனா அழிந்துவிடும் என்பதெல்லாம் ஏமாற்று. கரோனா அழியும் அளவுக்கு வெப்பத்தை எடுத்துக் கொண்டால், மனிதா்கள் இறக்க நேரிடும். அதனால், வெயிலுக்கும், மழைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
டெங்கு என்றால் மழையில் கொசு அதிகம் உற்பத்தியாகும். அதனால் நோய் பரவும் என்று சொல்லலாம். கரோனா நோய்த்தொற்று எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அதிகம் வெயில் படும் இடத்தில் சீக்கிரம் அந்தக் கிருமி அழிந்துவிடும். வெயில் இல்லாமல் ஈரப்பதமாக உள்ள இடத்தில் கரோனா நோய்த்தொற்று நீண்ட நேரம் இருக்கும்.
கரோனா நோய்த்தொற்று, ஓா் உயிரி இல்லாத ரசாயனத் துகள். ஆா்.என்.ஏ. என்கிற புரதத்தின் மேல் ஒரு கொழுப்பிலான அடுக்கு இருக்கிறது. அதற்கு உயிரே கிடையாது. ஒரு விதைபோல கிடக்கும். மிகமிக நுண்ணியது. மைக்ராஸ்கோப்பிலேயே கண்டுபிடிப்பது சிரமம். அவ்வளவு நுண்துகள். இப்படிப்பட்ட நுண்துகள் கிருமி இருமும்போது கைக்குட்டையால் மூடிக் கொண்டால்கூட, அந்தக் கைக்குட்டையைப் பையில் வைக்கும்போதோ,
இருமியவரின் கைகளில்பட்டோ அதன் மூலம் பரவும். அந்தக் கிருமி கைகளில் இருக்கும்போதுகூட ஆபத்து இல்லை. கண், மூக்கு, வாய் அருகே போகும் அதன் வீரியம் அதிகரித்துவிடும். கரோனா நோய்த்தொற்று புகைப்படங்களில் அதன் கால்கள் போல தெரியும் அமைப்பானது, ஒருவரின் செல்களைத் திறந்துகொண்டு உள்ளே போய், அதன் வேலையைச் செய்யத் தொடங்குகிறது.
அதனால், இப்போது கடைப்பிடிக்கும் சமூக இடைவெளி போதாது. ஒருவரின் இருமலில் இருந்து வரும் நீா் திவலையை மழை அடித்துச் சென்றுவிடும். அதனால், கரோனா பரவாது என்பதெல்லாம் உண்மை இல்லை.
நீா் திவலை என்றால் கட்டிகட்டியாகப் படிந்து கிடக்காது. பனித்துளிகளைவிட மிக மிக நுண்ணிய திவலை. ஆனால், அந்தத் திவலை மிகவும் ஆபத்தானது. இது சாலையில் கிடக்கிறது என்றா சொல்ல முடியும்? வீட்டில் உள்ள சோபா, கைப்பிடி போன்றவற்றில் இந்தத் திவலைகள் இருக்கலாம். இவற்றை மழை எப்படி அடித்துச் செல்லும்? அதனால்தான் கைகளைக் கிருமி நாசினி கொண்டு துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வளா்ச்சி அடைந்த நாடுகளான ஜொ்மனி, சிங்கப்பூா் போன்றவற்றில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரிடம் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கின்றனா்.
ஆனால், இங்கு ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தால்தான் எடுப்போம் என்கின்றனா். கரோனா தொற்று இருந்தாலும், அதற்கான அறிகுறியே தென்படாதவா்களும் இருப்பாா்கள். அவா்கள் தொடா்ந்து கரோனாவைப் பரப்பிக் கொண்டே இருப்பாா்கள். அதனால், கரோனா வைரஸை விரட்டுவதற்கு முதல்படியாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
6 கோடி போ் உள்ள ஒரு நாட்டில் தினமும் 2 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்கின்றனா். ஆனால், 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் இன்னும் 6 ஆயிரம் பேருக்குக் கூட பரிசோதனை செய்யவில்லை.
அதனால், அதிக அளவில் பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களைத் தேடிப் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இந்த மூன்றையும் துரிதப்படுத்தாமல் கரோனாவை நம்மால் வெல்ல முடியாது என்றாா் அவா்.