புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிசியாலஜி பிரிவில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.