கொரோனா காரணமாக தினமும் மரத்தில் ஏறி பாடம் நடத்தும் ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/04/2020

கொரோனா காரணமாக தினமும் மரத்தில் ஏறி பாடம் நடத்தும் ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்!



மாணவர்களுக்காக மரத்தில் ஏறி வகுப்புகள் எடுக்கும் பேராசிரியர் சுப்ரதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்த தினமும் மரத்தின் மீது ஏறி பாடம் நடத்தி வருகிறார் ஒரு ஆசிரியர். யார் அந்த ஆசிரியர்? எங்கே நடக்கிறது இந்த சம்பவம்? வாருங்கள் பார்க்கலாம். மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தில் உள்ள அஹாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரதா பதி.
35 வயதாகும் இவர், கொல்கத்தாவில் உள்ள அடம்ஸ் பல்கலைக்கழகம், ரைஸ் கல்வி நிலையம் ஆகிய இரண்டிலும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


இதனால் பேராசிரியர் சுப்ரதா பதி, மேற்கு வங்கத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கே சென்று விட்டார். பின்னர், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டதால், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும்படி கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வந்தன. பேராசிரியர் என்ற முறையில், தனது பணியை சரியாக செய்ய வேண்டும் என்ற உறுதியில், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்த சுப்ரதா பதி முடிவு செய்தார். ஆனால், அவருடைய வீட்டில் இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லை. இன்டர்நெட் இணைப்பு எங்கு நன்றாக கிடைக்கிறது என்று வீட்டைச் சுற்றிலும் ஒவ்வொரு இடமாக சென்றுள்ளார்.
அப்போது வீட்டருகே இருந்த, வேப்ப மரத்தில் ஏறி தற்செயலாக சோதனை செய்தார். அங்கு இன்டர்நெட் நன்றாக கிடைத்தது.


இதையடுத்து வேப்ப மரத்தின் உச்சியிலேயே, மூங்கில் கம்புகளை அடுக்கி, உட்காருவதற்கு வழிவகை செய்து கொண்டார். தினமும் உணவு, தண்ணீர் பாட்டிலுடன் மர உச்சிக்கு செல்லும் அவர், 3-4 வகுப்புகளுக்கான பாடம் நடத்தி முடித்தப் பிறகு தான் கீழே இறங்குகிறார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேராசிரியர் சுப்ரதா பதி கூறுகையில், ‘எனக்கு வேறு எங்கேயும் இன்டர்நெட் கிடைக்கவில்லை. வேப்ப மர உச்சியில் தான் கிடைக்கிறது. பேராசிரியர் என்ற முறையில், நான் தான் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தாக வேண்டும். எனவே, மர உச்சியிலேயே அமர்ந்து வகுப்புகள் எடுப்பதற்கு முடிவு செய்து விட்டேன்.


காலையில் டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், லேப்டாப் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மர உச்சிக்கு சென்று விடுவேன்.
அடுத்தடுத்து வகுப்புகள் நடத்தி முடித்து விடுவேன். காலையில் ஒன்றும் தெரியாது. நேரம் ஆக ஆக, வெயில் சூடு என்னை ஒரு வழியாக்கி விடும். வகுப்புகள் எடுக்கும் போது சில நேரங்களில் இயற்கை உபாதைகள் வரும். ஆனால், அதை அடக்கிக் கொண்டு தான் வகுப்புகள் எடுப்பேன். சமயத்தில் மழை,
இடி, மின்னல் எல்லாம் ஏற்படும். அப்போது மட்டும் கீழே இறங்கி விடுவேன். மழை பெய்தால், நான் அமைத்து வைத்த மூங்கில் செட்அப் எல்லாம் சீர்குலைந்து விடும். மறு நாள் அதை சீரமைத்துவிட்டு வகுப்புகள் எடுப்பேன்’. இவ்வாறு பேராசிரியர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்காக மரத்தில் ஏறி வகுப்புகள் எடுக்கும் பேராசிரியர் சுப்ரதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459