பெரும் ஆபத்தை நோக்கி அமெரிக்கா... - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/04/2020

பெரும் ஆபத்தை நோக்கி அமெரிக்கா...

.

ட்ரம்ப் ஆட்சியின் ஆரம்ப காலத்திலிருந்து, அவரது ஒழுங்கற்ற மனநிலை குறித்து, மனநல வல்லுநர்களில் ஒரு குழுவினர் மக்களை எச்சரித்து வருகின்றனர். அவர்களது அந்த மதிப்பீடுகள் சர்ச்சைக்குள்ளாகின. அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association) மரபு நெறிமுறைகள் ஒரு அரசியல் தலைவரை, அச்சங்கத்தின் உறுப்பினர்கள் அவ்விதம் அணுகுவதை வெளிப்படையாகவே தடை செய்கின்றன.
எது எப்படி இருந்தாலும், நான் முன்பு ஒரு முறை குறிப்பிட்டதுபோல் ட்ரம்ப்பிடம் தனிப்பட்ட வகையில் மனநலப் பரிசோதனை நடத்துவது, மறைக்கப்பட்ட எந்த விஷயத்தையும் வெளிப்படுத்திவிடாது. மேலும், இது மிக அபூர்வமான, நெருக்கடியான காலகட்டம். வெள்ளை மாளிகையின் ஆலோசகர்களில் ஒருவரான கெல்லியான் கான்வேயின் கணவரும், வழக்கறிஞருமான ஜார்ஜ் டி.கான்வே ‘தி அட்லான்டிக்’ (The Atlantic) இதழில் 2019 அக்டோபரில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். ட்ரம்ப்பிடம் நார்சிஸம் (சுயமோகம்) ரீதியான நடத்தைக் கோளாறின் அனைத்து அடையாளங்களும் இருப்பதாக அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியான நடத்தைக் கோளாறு, வளமான காலத்திலேயே நம் நாட்டின் தார்மிக ரீதியான, நிறுவன ரீதியான அடித்தளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
இன்றோ உலக அளவிலான தொற்றுநோய்ப் பரவலின் நடுவில் நாம் இருக்கிறோம். அதிபரிடம் தென்படும் இந்த அறிகுறி, அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்ல… பல உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
அடிப்படையிலிருந்து ஆரம்பிப்போம்.
முதலாவது:
ட்ரம்ப் போன்ற நார்சிஸ ஆளுமைகள், தங்கள் சுய திறன்கள் குறித்து வானளாவிய மாயைகளைக் கட்டமைத்துக் கொள்வார்கள். தங்கள் சாதனைகளை மிகைப்படுத்திக் காட்டுவார்கள்; அதிகாரத்தைக் குவித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவார்கள், எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் எனும் பதற்றத்துடன் இருப்பார்கள்.
உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தில் இது எதைக் குறிக்கிறது?
பரிசோதனைகள் நடத்த நம்மிடம் ஏராளமான வசதிகள் இருக்கின்றன என்கிறார் ட்ரம்ப். ஆனால், உண்மையில் நம்மிடம் (அமெரிக்கர்களிடம்) போதுமான வசதிகள் இல்லை. கரோனா பரிசோதனைக்காகப் பிரத்யேக வலைதளத்தை கூகுள் உருவாக்கி வருவதாக அறிவித்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. கடற்படையைச் சேர்ந்த, மருத்துவமனை வசதி கொண்ட கப்பலை நியூயார்க்குக்கு அனுப்பி வைத்தார் ட்ரம்ப். ஆனால், வெறுமனே விளம்பரம் என்பதைத் தாண்டி அதன் மூலம் ஒன்றுமே நடக்கவில்லை. ஹட்ஸனை வந்தடைந்த அந்தக் கப்பல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி கேலிக்குரியது என்று நியூயார்க்கைச் சேர்ந்த மருத்துவத் துறை நிபுணர் விமர்சித்திருக்கிறார்.
இரண்டாவது:
நார்சிஸ ஆளுமைகளின் அதீதப் பாசாங்குத்தனமானது, அவர்களின் ஈகோ, நுரையைப் போல மென்மையானது; எளிதில் உடைந்துவிடக்கூடியது என்பதை மறைத்துவிடுகிறது.
ஓரங்கட்டுப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்திலேயே அவர்கள் இருப்பார்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாத அளவுக்குச் சகிப்புத் தன்மையற்றவர்களாக இருப்பார்கள்.
உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தில் இது எதைக் குறிக்கிறது?
ட்ரம்ப்பைப் போன்ற நார்சிஸிஸ்ட் தலைவர்கள், சிறந்த நபர்களைத் தங்களிடம் வைத்திருக்க மாட்டார்கள். ஜால்ரா அடிப்பவர்கள்தான் அவர்களிடம் அணிவகுத்திருப்பார்கள். அறிவார்ந்த, கற்பனைத் திறன் மிக்க ஆளுமைகள் நாட்டுக்குத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில், டாக்டர் ஆன்டனி பவுசி, டாக்டர் டெபோரா பிர்க்ஸ் போன்ற விதிவிலக்குகளைத் தவிர, ட்ரம்ப்பைச் சூழ்ந்திருப்பவர்கள் கொஞ்சம்கூட அனுபவமற்றவர்கள்.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சமயத்தில், இந்தப் பேரழிவை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நிபுணர்களின் குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால், விஷயம் தெரியாத விடலைப் பையனான தனது மருமகனை அந்தப் பணியில் அமர்த்துகிறார். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் அல்லது கருவூலத்தின் முன்னாள் செயலாளர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்கலாம்.
ஆனால், சிஎன்பிசி (CNBC) சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த லார்ரி குட்லோவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.
இதற்கிடையே, நார்சிஸிஸ்ட்டான ட்ரம்ப்பின் தவறான நம்பிக்கைகளையும், பொய்யான தகவல்களையும் திருத்துவதிலேயே ஈடுபட்டிருக்கும் பவுசியும் பிர்க்ஸும், அந்த நார்சிஸிஸ்ட்டை அவமதித்துவிடாத வகையில் அளந்தெடுத்த வார்த்தைகளில்தான் பேசுகிறார்கள். நம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக நம் தேசத்தை அதிபர் உருவாக்க வேண்டிய சமயத்தில், அவருக்குப் பாதுகாப்பான ஸ்தானத்தை உருவாக்கப் பாடுபட்டுவருகிறார்கள் அவர்கள் இருவரும்.
மூன்றாவது:
நார்சிஸ ஆளுமைகள், வேறு எதையும்விட, மோதல்களை உருவாக்குவதையும்
, பிரிவினையை விதைப்பதையும்தான் அதிக அளவில் விரும்புவார்கள். அது ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைக்கும். முழுக் கட்டுப்பாடும் அந்த ஆளுமைகளின் கைகளில் இருக்கும்.
உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தில் இது எதைக் குறிக்கிறது?
தேசிய அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு மாறாக, விலைமதிப்பற்ற வளங்களுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறார் ட்ரம்ப். அதிகாரப் போட்டிக்கான அற்ப அரண்மனையாக ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை செயல்படுகிறது. ஆறுதலுக்காக மக்கள் ஏங்கும் சமயத்தில், ஜனநாயகக் கட்சியினருடனும், ஊடகத் துறையினருடனும் சண்டை பிடிக்கிறார் ட்ரம்ப்.
நார்சிஸிஸ்ட் ஆளுமைகள் நிம்மதி அளிப்பதில்லை. பிற இதயங்களின் தேவைகளை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது.
நான்காவது:
நார்சிஸ ஆளுமைகள், பழிவாங்கும் தன்மை கொண்டவர்கள். ஒரு நல்ல நாள் பார்த்துப் பழி தீர்த்துவிடுவார்கள்.
உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தில் இது எதைக் குறிக்கிறது?
தன்னைப் புகழ்கின்ற ஆளுநர்களிடம் தாராளம் காட்டும் ட்ரம்ப், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறியவர்களைத் தண்டிக்கிறார்
. “அவர்கள் நம்மைச் சரியாக நடத்தவில்லை என்றால், அவர்களை அழைக்காதீர்கள்” என்று துணை அதிபர் மைக் பென்ஸிடம் அவர் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, நியூயார்க் உடனான அவரது பகை மிக மிக ஆபத்தானது. நியூயார்க் மாகாணத்துக்குப் போதுமான வென்டிலேட்டர்கள் இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை” என்று பதிலளித்த ட்ரம்ப், அந்த மாநிலத்தைப் பற்றிக் குறைசொல்ல ஆரம்பித்தார்.
எல்லாவற்றையும்விட இன்றைக்கு மிகப் பொருத்தமான விஷயம், வரலாற்றின் அடிப்படையில் நார்சிஸிஸ்ட் ஆளுமைகள் மிகப் பலவீனமானவர்கள் என்பதுதான்.
உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தில் இது எதைக் குறிக்கிறது?
தலைமை தாங்குவதற்கு இயல்பாகவே பயப்படுகிறார் ட்ரம்ப். பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை வலுவாகப் பயன்படுத்த அவரால் முடியாது. ஏனெனில், அதற்கான பொறுப்பை அவர் சுமக்க வேண்டியிருக்கும் (இன்றைய தேதி வரைக்கும்,
மாநிலங்கள் தங்களுக்கான வென்டிலேட்டர்களைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்திவருகிறார்). பரிசோதனைகளில் ஏற்படும் தாமதம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “நான் அதற்குப் பொறுப்பேற்கவே மாட்டேன்” என்கிறார் ட்ரம்ப்.
“கடந்த ஆட்சியாளர்களின் வழியே நமக்குக் கிடைத்திருக்கும் பரிசோதனை சாதனங்கள் பழுதடைந்தவை, வழக்கொழிந்தவை” என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது பேசியிருக்கிறார். ஆனால், முந்தைய ஆட்சியின்போது கரோனா வைரஸ் என்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகக் கடுமையானவர்கள்கூட, நெருக்கடியான தருணங்களின்போது தங்கள் கோபத்தை மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள் என்பதற்கு உதாரணங்கள் உண்டு. ஆனால், நெருக்கடி நிலையை நிர்வகிக்கும் விஷயத்தில் எடுக்கும் நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சமும், அவரது மனக்கோளாறுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்கள் இறந்துகொண்டிருக்கும்போது, தொலைக்காட்சியில் தனது தரவரிசை பற்றி பெருமையடித்துக்கொள்கிறார்
; ஃபேஸ்புக்கில் தான் தான் நம்பர் 1 என்று கூச்சலிடுகிறார் (அது உண்மையல்ல என்பது வேறு விஷயம்).
ஆனால், எல்லா கண்களும் அவர் மீதுதான் இருக்கின்றன என்பது உண்மை. தன்னைத் தீவிரமாகப் பின்பற்றும் ரசிகர்களை பெற்றிருக்கிறார். தன் மீதான கவனக் குவிப்புக்கு அடிமையாகிக் கிடக்கும் ஒருவரது கனவு நனவாகிவிட்டது. எனினும், பிற எல்லா நார்சிஸிஸ்ட் ஆளுமைகளைப் போலவே, எவ்வளவு மோசமாக மக்களின் நினைவுகளில் அவர் பொறிக்கப்படுவார் என்பதைத்தான் கணிக்க முடியவில்லை!
– ஜெனிஃபர் சீனியர்,
நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459