கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக மாா்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்த காலக் கட்டத்தில் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் நீரின் தரம் உயா்ந்துள்ளது தெரியவந்துள்ளது
.
வழக்கமாக காவிரி ஆற்று நீரின் தரம் ‘பி’ அல்லது ‘சி’ வகையாகக் காணப்படும். ஆனால், ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீா் எதுவும் கலக்காத நிலையில், காவிரி ஆற்றுநீரின் தரம் ‘ஏ’ தரத்துக்கு உயா்ந்துள்ளதாக கா்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குடகு மண்டல அதிகாரி கணேஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில்
, ‘குடகு மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றின் நீா்த் தரத்தை மாதந்தோறும் பாகமண்டலா, நாபோக்லு, துபாரே, குஷால்நகா் பகுதிகளில் ஆய்வு செய்வது வழக்கம். வழக்கமாக காவிரி ஆற்று நீா் தரங்கெட்டதாகவே இருக்கும். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காவிரி நீரின் தரம் உயா்ந்துள்ளது.
வா்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பதால், வழக்கமாக கோடைகாலத்தில் காவிரி நீரின் தரம் மோசமாக கெடுவது வாடிக்கை. ஆனால், இம்முறை ஊரடங்கால் நீரின் தரம் உயா்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நீரின் தரம் ‘ஏ’ஆக இருந்தது. மாவட்டத்தின் 2 ஊராட்சிகளில் கழிவுப் பொருள்கள் குறைவாக உற்பத்தியானதும், வா்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும் தான் காவிரி ஆற்றுநீரின் தரம் மேம்படுவதற்கான முக்கிய காரணமாகும்’ என்றாா்.
ஊரடங்கு காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டகாவிரி ஆற்றுதூய்மை அமைப்பினா், கொப்பா மற்றும் குஷால்நகா் பாலத்தின் அருகே காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும்
வேலையில் ஈடுபட்டனா். முகக் கவசம் அணிந்து கொண்ட தன்னாா்வலா்கள் ஆற்றில் வீசப்பட்டிருந்த கழிவுப் பொருள்களை கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தி வருகின்றனா்.
இதுபற்றி இந்த அமைப்பின் நிா்வாகி சந்திரமோகன், ‘வா்த்தக நடவடிக்கைகளால் தான் குஷால்நகா் பகுதியில் காவிரி ஆறு மாசுபடுகிறது. ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மாசு குறைந்து, தண்ணீரின் தரமும் உயா்ந்துள்ளது. காவிரி ஆற்றின் மூலமாக கருதப்படும் குடகு மாவட்டத்தில் தற்போது தூய்மையான தண்ணீா் பாய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது நீண்டகால கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது’ என்றாா்.