கொரோனாவால் குலைநடுங்கும் வல்லரசு நாடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2020

கொரோனாவால் குலைநடுங்கும் வல்லரசு நாடு


சர்வ பலத்துடன் வலம் வந்த அமெரிக்காவை அலற விட்டு, ‘வல்லரசு’ என்ற வார்த்தையை மாயையாக்கிவிட்டது கொரோனா (கோவிட்- 19) வைரஸ். இதன் பாதிப்பில் சிக்கி அந்நாட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் செத்து விழுகின்றனர். தனித்தனியாய் புதைக்கக்கூட இடம் இல்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்க நாதி இல்லை. இயந்திரங்கள் தோண்டிய பள்ளங்களில் பிணங்களை குவியல் குவியலாய் மூழ்கடிக்கிறது அந்நாட்டு அரசு.
ஆவிகளின் நகரம்
சில மாகாணங்களைத் தவிர அமெரிக்காவின் அனைத்து பகுதிகளுமே கொரோனாவின் கோர பிடியில் சிக்கிவிட்டன. உலகிற்கே கலாச்சார, வர்த்தக தலைநகராக விளங்கிய நியூயார்க், வைரஸ் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. வானுயர்ந்த மாட மாளிகைகள், மேகங்களை கொஞ்சும் கோபுரங்கள் என வியக்க வைக்கும் அந்நகரம் இன்று கொடிய நரகமாய் இருண்டுபோனது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்புகளில் பாதிக்கு மேல் இங்கு தான். நிகழும் மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு தான். தினமும் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர்.வாழ்வில் ஒரு முறையாவது அந்நகருக்கு சென்றுவிட மாட்டோமா… என்ற ஏக்கம் நிறைந்திருந்த உலக மக்களின் மனங்களை அந்நகரை அதிரச் செய்துள்ள கொரோனா மரண ஓலம் திகிலில் உறைய செய்துள்ளது. அந்நாட்டு மக்களே நியூயார்க்கை கோஸ்ட் சிட்டி’ (ஆவிகளின் நகர்) என அழைக்க துவங்கிவிட்டனர்.
டிரம்ப்பின் மெத்தனம்
82 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டது. இந்தியா போன்று அப்போதே அந்நாடு உஷாராகி இருக்க வேண்டும். கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. வர்த்தக மையங்கள், சுற்றுலா தலங்கள் எதுவும் மூடப்படவில்லை. தடையின்றி விமானங்கள் எல்லை தாண்டி பறந்தன. நிலைமை மோசமான பிறகே முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் அதிபர் டிரம்ப் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.விளைவு, 82 நாட்களில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்துவிட்டது. மரணம் 25 ஆயிரத்தை தொட்டுவிட்டது. உலகத்தில் அதிக பாதிப்பு, மரணங்கள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை அமெரிக்கா தனதாக்கிவிட்டது. தினமும் 2 முதல் 3 ஆயிரம் பேர் வரை மரணத்தை தழுவுகின்றனர்.இப்போது கொரோனா பரிசோதனை மின்னல் வேகமெடுத்துள்ளது. நியூயார்க் நகரில் 5 லட்சம், புளோரிடா, கலிப்போர்னியா நகரங்களில் தலா 2 லட்சம், நியூஜெர்சி, டெக்ஸாஸ் நகரங்களில் தலா 1.5 லட்சம் உட்பட இதுவரை 32 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. எப்படியாவது கொரோனாவிற்கு எதிரான போரில் வென்றுவிட அந்நாடு போராடுகிறது.
அமெரிக்காவின் பணம்… சர்வ வல்லமை கொண்ட போர் பலம்… வல்லரசு என்ற அந்தஸ்து… எல்லாம் கண்ணுக்கு தெரியாத அணுவினும் சிறுத்த வைரஸிடம் தோற்றுப் போய்விட்டன. துயரில் வாடும் அந்நாட்டில் 43,500 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல்.
‘டாப்- 20ல்’ இந்தியா
பிற நாடுகளுக்காக கவலைப்படும் வேளையில், நாமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. துவக்கத்தில் மிகவும் குறைவான பாதிப்புகள் உள்ள நாடாக விளங்கிய இந்தியா, வேகமாக முன்னேறி ‘டாப் -20’ நாடுகள் பட்டியலில் நுழைந்துவிட்டது. உலக அளவில் அதிக மரணங்கள் நடந்த பட்டியலில் இந்தியாவிற்கு 19வது இடம் கிடைத்துள்ளது. இவ்வேகம் தொடர்ந்தால் இந்தியாவின் நிலையும் கவலைக்கிடம் தான்.இதுவரை நம் நாட்டில் சமூகப்பரவல் இல்லை என நமது அரசு ஆறுதல் அளித்து வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை நொறுக்க ஊரடங்கை மே 3 வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார்
ve="true"> . இந்தியாவிற்கு இதுவரை கை கொடுத்த நடவடிக்கை என்றால், சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது தான். இப்போது நீட்டித்திருப்பதும் நல்ல முடிவு. சிக்கல்கள் நிறைந்திருந்தாலும் கொரோனாவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேறு வழி இல்லை. ஜீரோ பாதிப்பு நிலையை எட்டும் வரை இந்தியாவிற்கு திக்… திக்… நிமிடங்கள் தான்.
இது 24 மணி நேர நிலவரம்
நேற்று காலையுடன் நிறைவு பெற்ற கடைசி 24 மணி நேர நிலவரப்படி கொரோனா டாப்-10 நாடுகளில் ஏற்பட்ட புதிய பாதிப்பு விவரத்தை பார்க்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்காவில் முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு 82 நாட்கள் ஆகிவிட்டன. 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 574 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 228 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
இத்தாலி
இங்கு முதல் பாதிப்பு தென்பட்டு 74 நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் பாதிப்பு உச்சத்தில் தான் உள்ளது. 24 மணி நேரத்தில் 2,972 பேர் புதிதாக பாதித்துள்ளனர். 602 பேர் இறந்துள்ளனர்.
ஸ்பெயின்
இந்நாட்டில் 73 நாட்களுக்கு முன்பு முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் 2,442 பேரை கொரோனா தாக்கியுள்ளது.
ve="true"> 300 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ்
அமெரிக்காவிற்கு அடுத்த நாள் இங்கு முதல் கொரோனா உறுதியானது. இப்போது 81 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 6,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 762 பேர் இறந்துள்ளனர்.
பிரிட்டன்
இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 275 பேரை பாதித்த கொரோனா, 782 பேருக்கு மரணத்தை தந்துள்ளது. முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு 74 நாட்கள் ஆகின்றன. இந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு பாதிப்பில் இருந்து மீண்டார்.
ஈரான்
கொரோனா வேட்டை துவங்கி 55 நாட்கள் ஆகின்றன. புதிதாக 1,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகி இருக்கின்றனர்.பெல்ஜியம்இங்கு 70 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு தென்பட்டது. 24 மணி நேரத்தில் 530 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 254 பேர் இறந்துள்ளனர்.
சீனா
பூமிப்பந்தில் முதல் கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடு இது. இங்கிருந்து தான் பிற நாடுகளுக்கு கொரோனா தாவியது. சீனாவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது
ve="true"> . கடைசி 24 மணி நேரத்தில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு இல்லை.
ஜெர்மனி
இங்கும் கொரோனா தாண்டவம் 70வது நாளை கடந்துவிட்டது. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1287 பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு 100 .
நெதர்லாந்து
கடந்த 24 மணி நேரத்தில் 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டு 47 நாட்கள் ஆகின்றன.
5 லட்சம் பேர் மீண்டனர்
சீனாவில் 78,282 பேர், ஜெர்மனியில் 72,600 பேர், ஸ்பெயினில் 70,853 பேர், அமெரிக்காவில் 49,999 பேர், இத்தாலியில் 37,130 பேர், பிரான்ஸில் 29,121 பேர், சுவிட்சர்லாந்தில் 14,700 பேர், பிரேசிலில் 14,026 பேர், கனடாவில் 8,235 பேர் உட்பட உலகளவில் 5 லட்சத்து 717 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
சிக்கலில் சீனா
உலகிற்கே கொரோனா (கோவிட்- 19) வைரஸை அறிமுகம் செய்த நாடு சீனா.
ve="true"> அந்நாட்டில் வைரஸ் ஆட்டம் மார்ச் இறுதியில் குறையத் துவங்கியது. கொத்துக் கொத்தாய் நேர்ந்த மரணங்கள் அடியோடு நின்றன. தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தினமும் 90 முதல் 100 புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மார்ச் இறுதியில் புதிய இறப்புகள் இல்லாத நிலையில், கடந்த 15 நாளில் 30 பேர் இறந்திருப்பது, அந்நாட்டில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து எந்த ஒரு நாடும் இதுவரை 100 சதவீதம் மீளவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459