மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது: ஏஐசிடிஇ - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2020

மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது: ஏஐசிடிஇ


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் மாணவர்களிடம் கல்லூரிக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் பருவத் தேர்வுகளை எழுத முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. கோடை விடுமுறையையும் கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.
ஏப்ரல்/மே பருவத் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் ஒரு சில கல்லூரிகள் முடிக்காமலேயே இருக்கின்றன. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் முடிக்கப்படாத பாடத்திட்டத்தை எப்படி முடிப்பது என்று ஆலோசிக்கவும் பருவத் தேர்வை எப்படி நடத்துவது என விவாதிக்கவும் விரைவில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஒரு சில கல்லூரிகள் ஆன்லைன் பாடத்தைத் தொடங்கியுள்ளன. அதுபோன்று இந்த பருவத்துக்கான கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலான ஏஐசிடிஇக்கு புகார் வந்துள்ளது.
"சேர்க்கைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று எங்களுக்குப் புகார்கள் வந்தது. எனவே ஊரடங்கு காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த மாணவர்களை வலியுறுத்தக் கூடாது என்று கல்லூரிகளுக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது” என்று ஏஐசிடிஇ உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான மாற்றப்பட்ட புதிய தேதிகளை ஏஐசிடிஇ அறிவிக்கும் எனவும் அந்த புதிய தகவல்கள்
அனைத்து கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களில் பதிவிடப்படும் எனவும் மாணவர்களுக்கு ஈமெயில் வழியாக இந்த தகவல் அனுப்பப்படும் எனவும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
ஏஐசிடிஇயும், பல்கலைக்கழக மானிய குழுவும் விரைவில் திருத்தப்பட்ட கல்வி அட்டவணையை வெளியிடும் என்று தெரிவித்துள்ள அவர், தற்போதைய செமஸ்டருக்கான ஆன்லைன் வகுப்புகளைக் கல்லூரிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459