கொரனா விடுமுறையில் வீட்டுச் சிறையில் தொடர் வாசிப்பில் நேற்றும் இன்றும் படித்த 28 வது புத்தகம்.கலாச்சாரத்தின் அரசியல்.. இப் புத்தகம் எனக்கு கிடைத்தது குறித்து சிறிய பிளாஸ் பேக்
.2003 ஜாக்டோ-ஜியோ போராட்டம். சரண் விடுப்பு 15 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைப்பு, பென்சனில் கை வைக்க முயற்சி,
சங்கம் வைக்கும் உரிமை இப்படி பல கோரிக்கைகள் முன்வைத்து போராடிய போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அடக்கு முறை சட்டமான எஸ்மா... டெஸ்மா சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் நான் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 9 நாட்கள் அடைக்கப்பட்டேன். விருதுநகர் மாவட்ட தோழர்கள் (50 பேர்) அனைவருக்கும் ஒரே செல்.விடுதலை ஆகி வந்த பின்பு 26.04 2004 -ல் சிறை சென்ற தோழர்களை கௌரவிக்க MUTA சார்பில் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் துண்டு போர்த்தப்பட்டு பரிசாக வழங்கப்பட்ட புத்தகம் தான் கலாச்சாரத்தின் அரசியல்.. துண்டு இல்லை. புத்தகம் இருந்தது.இப்போது தான் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
கலாச்சாரத்தின் அரசியல் குறித்து 176 பக்கம் கொண்ட இந்நூல் மிகவும் சிறப்பாக 7 தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
50,000 ஆண்டுகளில் 45,000 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த வாழ் நிலையை , சமூக அமைப்பை பூர்வீக சமுதாயம் என்று குறிப்பிடுகின்றோம்.
மீதியுள்ள இந்த 5000 ஆண்டுகளில் தான் குடும்பம் ,தனிச்சொத்து, அரசு என்ற மூன்று அமைப்பின் கொள்கலனில் மனித சமூகத்தின் அத்துனை அடிமைத்தளங்களுக்குமான அச்சு வார்க்கப்பட்டது .
மனிதனை சுதந்திரத்திலிருந்து பறித்து எடுத்த இந்த ஒடுக்குமுறை கருவிகளின் உச்சமே அரசு.
வர்க்கங்கள் இல்லாத காலத்தில் சுரண்டுவோரும்,சுரண்டப்படுவோரும் இல்லாத காலத்தில் அரசு என்பது இல்லையே ஏன்?
உற்பத்தி வளர்ச்சி மனிதனை வர்க்க வேறுபாடுகளுக்கும் , தனிச் சொத்துக்கும் இட்டுச் சென்றது. தனிச்சொத்தை தம் இரத்த வம்சத்திற்கு மட்டும் கொடுக்க அவனுக்கு வாரிசு தேவையானது. சுரண்டல் நீடிக்கின்ற வரையில் சமத்துவம் என்பது இருக்க முடியாது.
அரசு என்பது அனைத்து மக்களுடைய ஆட்சி என்று பொருள் என்பது முதலாளித்துவ பொய் ஆகும்.
அரசு என்பது தனது ஆட்சியை வன்முறை,அடக்கு முறை, பலவந்தம் ஆகியவற்றின் மூலம் மட்டும் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை.மேற்கண்டவற்றின் வன்முறைக்கான ஒப்புதலை மக்களிடத்திலிருந்தே பெற்றுக் கொள்கிறது.
சாதியம், சமயம், இலக்கியம், கல்வி, அறம், சட்டம், நீதி, ஊடகங்கள் என அனைத்தையும் தனது வர்க்க நலனுக்காக வடிவமைத்த ஆளும் கூட்டம் பொதுவானது என்ற பெயரில் மக்களை ஏற்றுக் கொள்ள வைத்துள்ளது.
சாதி:
இந்தியாவில் வேத காலத்தில் ஏற்கனவே இருந்த இனக்குழு வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டது.சிந்து சமவெளியின் ஆளும் கூட்டம் பொருளாதார சுரண்டலை நிலை நிறுத்த வேதம் என்ற விசயத்தை மனிதனின் பிறப்பில் உலவ விட்டது . வேத காலத்தில் நிலவிய வர்ண முறை தொடர்ந்து உழைப்பை மட்டுமே மையப்படுத்தப்பட்ட தாசர்களாக மனித கூட்டத்தில் பெரும் பகுதி பிரிக்கப்பட்ட பின் பிரித்த சிறுபான்மையோர் உடமை,செல்வம்,வளம், சிந்தனை ஆகியவற்றில் பாய்ச்சல் வேகத்தில் வளர்த்தனர்.
உபநிடதங்கள் எழுந்த காலப்பகுதியில் சமுதாயம் ஆளும் வர்க்கம் , உழைக்கும் வர்க்கம் என இரண்டாக பிளவு பட்டது.
ஆட்சியாளர்- அரசர்கள் ஓய்வு மிகுதியாலும் , செல்வம் மிகுதியாலும் சொற்பொழிவுகளிலும். விவாதங்களிலும் ஈடுபடும் வாய்ப்பை பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் உள்ளத்தை பாதித்த விசயம் மரண பயமாகும்.
அதிலிருந்து விடுபட அறிஞர்களின் ஆலோசனைகளும், போதனைகளும் தேவைப்பட்டன. இந்த சூழ்நிலையில் உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பு வெகுதூரம் விலகி விட்ட நிலையில் முன் வைக்கப்பட்ட கருத்து நிலையே ஞானம்.
அறிவு தேட்ட முயற்சி மூலம் மரணமின்மை என்ற பொய்மை முன் வைக்கப்பட்டது.
மநு சமூகத்தின் மிகப் பெரும்பான்மையோரை மரணத்தின் விளிம்பில் நிறுத்தி வைத்து உழைப்பை சுரண்டி ஆளும் வர்க்கம் மிக தேர்ந்த நிலையில் செயல்பட்டுள்ளது.
பிராமண,சத்ரிய, வைசியர்க்கு ஒருவரில்லா விடில் அடுத்தவர்க்கு தொண்டு புரிவதே சூத்திர தர்மம் ஆகும்.
மேல்தட்டு மக்கள் தமது உழைப்பை தாமே கொண்டு சென்று முன்வைக்க வேண்டும் என்பதே .சூத்திரர்களுக்கும் கீழான சண்டாளர்கள் நான்கு வானத்தைப் போலே தோன்றினாலும் அவர்கள் ஊருக்கு வெளியில் தான் வாழ வேண்டும். உடைந்த சட்டியில் உண்ண வேண்டும். பிணத்தின் மீதிருக்கும் ஆடைதான் உடுத்த வேண்டும். சண்டாளர் தன் சாதிக்குள்ளே பெண் எடுக்க , கொடுக்க வேண்டும்
. மாடு வளர்க்க கூடாது. நாய், கழுதை வளர்க்கலாம் என மநு வரையறை செய்துள்ளான்.
பிராமணன் எவ்வளவு தாழ்வுற நேர்ந்தாலும் நான்காம் வர்ணத்தாரான சூத்திரனின் உடல் உழைப்பு வேலையை மட்டும் 30 போதும் செய்யக் கூடாது என பிராமணனுக்கான ஒழுங்கை உருவாக்குகிறான் மநு.
உன்னுடைய இழி நிலையை போக்க மேல் சாதி கானுக்கு நீ தொண்டு செய். அதன் மூலம் உன் வர்னம் மாறும் என்று உருவாக்கப்பட்ட நம்பிக்கையின் மூலம் இந்த ஒடுக்குமுறை கெட்டிப் படுத்தப் பட்டது. இதை கெட்டிப் படுத்த வேண்டிய பொறுப்பும் கெட்டுப்படுபவனிடமே உணர்வுப் பூர்வமாக விடப்பட்டது.
"இந்த தெருவில் தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்க முழு உரிமை உண்டு" என்று சொன்னால்
, " நாங்கள் மனிதர்களுக்கு பயப்படா விட்டாலும் அந்த சாமிக்காவது பயப்பட வேண்டாமா "என சொல்லி தனது உரிமையை தானே மறுக்கிற தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை இன்றளவும் கேட்க முடிகிறது.
நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பே சாதீய முறை.பொருளாதார கட்டமைப்பில் மாறுதல் நிகழ்ந்தாலும் சமூகத்தில் பழமை கண்ணோட்டம் என்பது உடனடியாக நீங்கி விடாது.
தொடர்ச்சியான தத்துவப் போராட்டத்தின் மூலமே நீக்க முடியும் என்பதை காரல் மார்க்ஸ் , ஏங்கெல்ஸ் பல கட்டங்களில் வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
அறம் :
அறத்திற்குப் பின்னால் ஒரு அரசியலே இருக்கு.
எம் மன்னன் எதிரி நாட்டில் போரிடும் பொழுதும் கூட அற வழியில் நின்று போரிடுவான். போர் துவங்குவதற்கு முன்னர் முற்றுகையிடப் போகும் நகரங்களில் வசிக்கும் பார்ப்பனர்கள்,
நோய்வாய் பட்டவர்கள், பெண்கள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறு கூறி விட்டுத் தான் போர் புரிவான்.
" ஈன்று புறந்தறுதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே "
இந்த சங்கப் பாடலை மேலோட்டமாக பார்க்கும் போது குழந்தையைப் பெற்று தருவது தாயின் கடமையாகவும், அதனை சான்றோனாக வளர்ப்பது தந்தையின் கடமையாகும் முன்வைக்கப் பட்டுள்ளது தெரிகிறது.
ஈன்ற ஆண், பெண் குழந்தைகள் சான்றோன் ஆக்கப் பட்டார்களா ?
சான்றோன் ஆக்குகின்ற கடமையை சமூகத்தின் அனைத்து தந்தைகளாலும் நிறைவேற்ற முடிந்ததா?
இந்த இரண்டு வரி சங்கப் பாடலுக்குள் நான்கு முக்கியமான நபர்கள் இருக்கிறார்கள்
.
1. தானும் சான்றோன் ஆக முடியாத தன் குழந்தைகளையும் சான்றோன் ஆக்க முடியாத தாய்
2. தானும் சான்றோனாகாத, தன் மகனையும் சான்றோன் ஆக்க முடியாத தந்தை.
3. தானும் சான்றோனாகி ,தன் மகனையும் சான்றோனாக்க முடிந்த தந்தை.
4. இந்த மூன்றையும் காத்து வழி நடத்துகிற அரசு
இந்த நான்கு பிரிவையும் சமூகத்தில் பலமாக கெட்டுப்படுத்தவே வளமான இலக்கியங்களில் வன்மையாக முன் வைக்கப்பட்டது அறங்கள்.
ஆணின் பாலியல் வேட்கையை மனைவியிடத்திலோ, அல்லது பரத்தை இடத்திலோ எங்கும் அதை கட்டுப்படுத்தவோ ,
வரையறுக்கவோ முன் வராத அறம் பிறன் மனையை நோக்கும் பொழுது மட்டும் மிகக் கூர்மையாக பாய்கிறது ஏன்? ஏனெனில் பிறன் மனையுடன் கூடினால் வர்ன அடிக் கட்டுமானத்தை உடைத்து விடும் என மநு சொல்வது புரியும்.
அடுத்து சமயம் எவ்வாறு உருவானது என்பது அருமையாக சொல்லப் பட்டுள்ளது.
இந்து மதத்திற்கு போட்டியாக சமணம், பெளத்தம் தோன்றியதை எவ்வாறு முறியடிக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெளத்த, சமண எதிர்ப்பிலிருந்து தன்னை தற்காத்து மீட்டுக் கொள்ள ஆரியரல்லாத இனக்குழு மக்களின் வழிபாட்டினை தனதாக்கி கொள்ளும் பிராமணீய உத்தியே அவதாரங்கள்
அம்சங்கள் என்ற கோட்பாடாக பர்ணமித்தது.
இதுவரை சொல்லப்பட்டு வந்த, "அறம், தர்மம், நீதி, சாதி, சமயம், கல்வி, சட்டம் இவை அனைத்தையும் உள்ளீடாக கொண்ட கலாச்சரம்" எல்லாம் செய்த ஒரே செயல் அதிகாரத்திற்கு முன் மக்களை மண்டியிடச் செய்ததே.
முற்போக்காளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய எளிமையான தத்துவ நூல் ஆகும். தெரியாத பல விபரங்கள் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளன. அவசியம் அனைவரும் படிக்க வேண்டும்.
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி .