புதுடில்லி: தெற்கு டில்லி மாவட்டத்தில், பிரபல பீட்சா நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவெரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் பீட்சா விநியோகித்த 72 குடும்பங்களை சுய தனிமையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி மாநிலத்தில் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 32 பேர் பலியாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும், உணவு பார்சல்களை விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தெற்கு டில்லி மாவட்டம், மால்வியா நகரைச் சேர்ந்த பிரபல பீட்சா நிறுவனம், சோமேட்டோ மூலம் பீட்சாக்களை அப்பகுதியில் டெலிவெரி செய்து வந்துள்ளது. அதில் வேலைப் பார்த்த ஒரு டெலிவெரி நபருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விசாரணையில், அவர் 72 குடும்பங்களுக்கு அப்பகுதியில் பீட்சா டெலிவெரி செய்துள்ளது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட மாவட்ட கலெக்டர், டெலிவெரி நபர்கள் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மற்ற 16 டெலிவெரி நபர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்கள் தினசரி கண்காணிக்கப்படுவார்கள். அந்நபர் டெலிவெரி பெற்ற பீட்சா நிறுவனத்தை மூடியுள்ளோம் என்றார்