தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் வரை மொத்தமாக 10 ஆயிரத்து 655 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், நேற்று மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 5வயது குழந்தையும் அடக்கம். வெளிநாடு, வெளிமாநில பயணம், விமான பயணம் மேற்கொண்ட உறவினர்கள் என எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் குழந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் தொற்று தொடர்பை கண்டறிய சுகாதாரத்துறை தீவிரம் காட்டிவருகிறது.
கோவையில் 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உட்பட 15 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 126 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2 இளம்பெண்கள் உட்பட 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, 118 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
118 பேரில், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 97 பேர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.